“எனக்கு பணம் முக்கியம் இல்லை” -நடிகை டாப்சி

சமீப காலமாக சினிமா துறையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கி உள்ளனர்.

Update: 2019-10-21 00:00 GMT
தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமான நடிகை டாப்சிக்கு இந்தியில் நடித்து திரைக்கு வந்த படங்கள் நல்ல வசூல் குவித்ததால் அங்கு வாய்ப்புகள் குவிகின்றன. இதனால் சம்பளமும் உயர்ந்துள்ளது. டாப்சி அளித்த பேட்டி வருமாறு:-

“சமீப காலமாக சினிமா துறையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு கொடுக்கிற சம்பளமும் உயர்ந்து இருக்கிறது. இது வரவேற்கத்தக்க மாற்றம். இந்தியில் முன்னணி கதாநாயகிகள் ரூ.20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதை இந்த மாற்றத்துக்கு உதாரணமாக சொல்லலாம்.

முன்பெல்லாம் கதாநாயகிகள் ரூ.1 கோடி வாங்கினாலே வாயை பிளப்பார்கள். இப்போது கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களுக்கு ரசிகர்கள் அதிக ஆதரவு தருகிறார்கள். அந்த படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலாவதும் நடிகைகள் சம்பளத்தை உயர்த்துவதற்கு ஒரு காரணம்.

சம்பளம் உயர்ந்தாலும் கதாநாயகர்களோடு ஒப்பிட்டால் அதிக வித்தியாசம் உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி படங்களிலுமே இந்த வித்தியாசம் இருக்கிறது. சினிமாவில் போட்டி என்று எதுவும் இல்லை. நான் 2 ஆண்டுகளாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறேன்.

சக கதாநாயகிகளோடு என்னை ஒப்பிட்டால் நான் வாங்கும் சம்பளம் குறைவாகவே இருக்கிறது. ஆனாலும் எனக்கு பணம் முக்கியம் இல்லை. நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகே பணத்தை பற்றி யோசிப்பேன்.” இவ்வாறு டாப்சி கூறினார்.

மேலும் செய்திகள்