கமல்ஹாசன் விலகல் ‘மருதநாயகம்’ படத்தில் விக்ரம்?

கமல்ஹாசன் கனவு படமான மருதநாயகம் படவேலைகள் 1997-ல் தொடங்கப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது.

Update: 2019-10-25 23:00 GMT
மல்ஹாசன் கனவு படமான மருதநாயகம் படவேலைகள் 1997-ல் தொடங்கப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. பட்ஜெட் மற்றும் சர்வதேச அளவிலான வினியோக சந்தை நிலவரம் உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இப்போது அதில் நடித்தவர்கள் தோற்றம் மாறி இருக்கும் என்ற பிரச்சினையும் எழுந்தது. இதுகுறித்து கமல்ஹாசன் கூறும்போது, மருதநாயகம் படம் வரும். 30 நிமிட காட்சிகளை எடுத்து விட்டேன். அதுதான் கடினமான பகுதி. அதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு பிறகு என்றுதான் காட்சிகள் விரிகின்றன. எனவே தோற்றம் பற்றிய பிரச்சினை எழாது.” என்றார்.

இந்த நிலையில் மருதநாயகம் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் தற்போது பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, “மருதநாயகம் படம் தயாராகும். எனக்கு அரசியல் பணிகள் இருப்பதால் மருதநாயகம் படத்தில் நான் இருக்க மாட்டேன். எனக்கு பதில் வேறு நடிகர் இருப்பார்” என்றார்.

இதன்மூலம் மருதநாயகம் படத்தில் இருந்து விலகுவதை கமல்ஹாசன் உறுதிப்படுத்தி உள்ளார். வேறு நடிகரை வைத்து பட வேலைகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது. கமலுக்கு பதில் விக்ரம் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் நடிப்பை கமல்ஹாசன் பெரிய அளவில் பாராட்டினார். விக்ரம் நடிப்பாரா? அல்லது வேறு நடிகர் தேர்வு செய்யப்படுவாரா? என்பது விரைவில் தெரிய வரும்.

மேலும் செய்திகள்