“பெண்கள் மது அருந்துவது-புகை பிடிப்பது போல் படமாக்கலாமா?” டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்

எஸ்.ஏ.சந்திரசேகரன் டைரக்‌ஷனில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘கேப்மாரி. ’ இது, எஸ்.ஏ.சந்திரசேகரனின் 70-வது படம்.

Update: 2019-11-25 01:15 GMT
ஜெய் நடித்த 25-வது படம். அதுல்யா ரவி, வைபவி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். படம், அடுத்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வர இருக்கிறது.

முழுக்க முழுக்க காதல்-நகைச்சுவை படமாக உருவாகி இருக்கிறது. படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும், முத்த காட்சிகளும் இடம்பெற்று இருப்பதால், வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் தணிக்கை குழுவினர், ‘ஏ’ சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.

படக்குழுவினர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். “கேப்மாரி என்ற தலைப்பை பற்றி எல்லோரும் கேட்கிறார்கள். அது, கெட்ட வார்த்தை அல்ல. என்று டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.

படத்தின் போஸ்டரில், மது பாட்டில் படம் இருக்கிறது. அரசே இதுபோன்ற காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்தநிலையில், பெண்கள் மது அருந்துவது-புகை பிடிப்பது போன்ற காட்சிகளை படங்களில் வைக்கலாமா? என்று நிருபர்கள் கேட்டார்கள்.

இதற்கு விளக்கம் அளித்த எஸ்.ஏ.சந்திரசேகரன், “படம் பார்த்தால், இந்த கேள்வியை கேட்க மாட்டீர்கள். பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலம் பற்றியே படம் பேசுகிறது. அனுமானத்தோடு எதையும் கூற வேண்டாம்” என்றார். அவர் மேலும் கூறியதாவது:-

“நடிகர் ஜெய்யை வைத்து எப்படி படம் எடுத்தீர்கள்? அவர் படப்பிடிப்புக்கு மிகவும் தாமதமாக வருவாரே?” என்று பலர் என்னிடம் கேட்டார்கள். அவர் என் படத்துக்குத்தான் சரியான நேரத்துக்கு வந்திருப்பார் போலும். அந்த வகையில், அவர் குறிப்பிட்ட நாட்களில் படத்தை முடித்துக்கொடுத்தது, ஆச்சரியம்தான்.” இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.

பெண்கள் மது அருந்துவது மற்றும் புகை பிடிப்பது பற்றி கேட்டதற்கு, கதாநாயகி அதுல்யா பதில் அளித்தார். “மது மற்றும் புகை பழக்கங்களை எப்போதுமே நான் ஆதரிப்பதில்லை. படத்துக்கு இதுபோன்ற காட்சிகள் தேவைப்பட்டால், அதை தவிர்க்க முடியாது. நான் நடிக்க தயார்” என்று கூறினார்.

படப்பிடிப்புக்கு ஜெய் தாமதமாகவே வருவார் என்ற குற்றச்சாட்டை உண்மை என்று உறுதி செய்வது போல், இந்த நிகழ்ச்சிக்கும் ஜெய் மிக தாமதமாகவே வந்தார்.

மேலும் செய்திகள்