திரைப்படங்களில் பெண்களுக்கு எதிரான காட்சிகள்; நடிகை பார்வதி வருத்தம்

தமிழில் பூ, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பார்வதி கூறியதாவது:-

Update: 2019-11-28 23:30 GMT
“சினிமாவில் பெண் வெறுப்புகளை காட்சிப்படுத்துகின்றனர். நான் நடிக்கும் படங்களில் அதுபோன்ற காட்சிகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்கிறேன். பெண்ணை உயர்வாக சித்தரிப்பதற்கும் வெறுப்பு ஏற்படும்படி காட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை காட்சிகளை பார்த்து ரசிகர்கள் கைதட்டுகிறார்கள் என்பதற்காக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கின்றனர்.

அதற்கு பதிலாக ரசிகர்களை யோசிக்க வைப்பதுபோல் காட்சிகள் வைக்கலாம். நான் 13-வது வயதில் இதுபோன்ற படங்களை பார்த்து நெளிந்து இருக்கிறேன். ஆனால் மற்றவர்கள் அந்த காட்சிகளை ரசித்தனர். பிறகு அதுபோன்ற சம்பவம் எனது சொந்த வாழ்க்கையிலும் நடந்தது. நானும் பாதிக்கப்பட்டேன்.

பெண்களுக்கு எதிரான திரைப்படங்கள் இளம் பெண்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். வணிக படங்கள் எடுக்கலாம். ஆனால் அவை பெண்களை இழிவுபடுத்துவதுபோல் இருக்க கூடாது. சினிமாவில் வசனங்களுக்குத்தான் முக்கியத்துவம் இருக்க வேண்டும்

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் காதலர்கள் கன்னத்தில் அறைந்து கொள்வதுபோல் காட்சி வைத்து பாலியல் வன்முறையை தூண்டி உள்ளனர்.”

இவ்வாறு பார்வதி கூறினார்.

மேலும் செய்திகள்