நடிகர் பாக்கியராஜ் நேரில் ஆஜராக தமிழ்நாடு மகளிர் ஆணையம் சம்மன்

நடிகர் பாக்கியராஜ் நேரில் ஆஜராக தமிழ்நாடு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Update: 2019-11-29 12:32 GMT
சென்னை,

சென்னையில் நடந்த பட விழாவில் பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் பேசும்போது பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.  அவர், ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது. பெண்கள் எச்சரிக்கையாக இருந்தால் தவறு நடக்க வாய்ப்பில்லை.

பொள்ளாச்சி சம்பவத்துக்கு ஆண்களை மட்டும் குறை சொல்ல முடியாது. பெண்ணின் பலவீனத்தை அவன் பயன்படுத்தி கொண்டான். கள்ளக்காதலுக்காக புருஷனை, குழந்தையை கொல்லும் சம்பவங்கள் நடக்கின்றன என்றெல்லாம் பேசினார்.

அவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் “பாலியல் பலாத்காரத்துக்கு பெண்கள் மீது பழி போட வேண்டாம். ஊசி, முள், சேலை எல்லாம் பல தடவை சொல்லப்பட்டு விட்டது. இந்த சிந்தனையால் பல பெண்கள் இறந்துள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, ஆந்திர மாநில மகளிர் அமைப்பு அளித்த புகாரின் பேரில் ஆந்திர மாநில போலீசார் பாக்யராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், “பாக்யராஜ் இந்திய பெண்களை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்தி பேசிய கருத்தை கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையங்கள் சமூகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வரவும் பெண்கள் உரிமைக்காகவும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. இது தெரியாமல் பாக்யராஜ் பேசி உள்ளார். பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பெண்களை பற்றி அநாகரீகமான முறையில் பேசியதாக எழுந்த புகாரின்பேரில், நடிகர் பாக்கியராஜ் வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி தமிழ்நாடு மகளிர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்