யுவன் சங்கர் ராஜா இயக்குகிறார்; இளையராஜா வாழ்க்கை படமாகிறது

ரசிகர்கள் மத்தியில் வாழ்க்கை வரலாறு படங்களுக்கு வரவேற்பு உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பலரது வாழ்க்கை படங்கள் வந்துள்ளன.

Update: 2020-01-13 23:30 GMT
பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் முதல்-மந்திரிகள் என்.டி.ராமாராவ், ராஜசேகர ரெட்டி, நடிகர் சஞ்சய்தத், நடிகை சாவித்திரி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், தோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் உள்ளிட்ட பலரது வாழ்க்கை படங்கள் வந்துள்ளன.

தற்போது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையும் தலைவி, த அயன் லேடி ஆகிய பெயர்களில் படமாகிறது. இந்த வரிசையில் இசை துறையில் சாதனை படைத்த இளையராஜா வாழ்க்கையும் படமாக உள்ளது. இந்த படத்தை அவரது மகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் பெயர் அடிபடுகிறது. படத்துக்கு ‘ராஜா த ஜர்னி’ என்ற பெயர் வைக்கப்பட உள்ளது. இளையராஜா 1976-ல் அன்னக்கிளி படத்துக்கு இசையமைத்து திரை உலகில் அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற மச்சானை பாத்தீங்களா, அன்னக்கிளி உன்னைத்தேடுதே பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது.

அதன்பிறகு படங்கள் குவிந்தன. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் இளையராஜா இசையில் வந்துள்ளன. பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் பெற்றுள்ளார். பல தேசிய விருதுகளும் வாங்கி இருக்கிறார்.

மேலும் செய்திகள்