இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது; கேரள மந்திரி வழங்கினார்

இசை உலகில் சாதனைகள் நிகழ்த்தியவர் இளையராஜா. 1976-ல் அன்னக்கிளி படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

Update: 2020-01-17 00:15 GMT
 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் அவரது இசையில் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன. இந்த நிலையில் கேரள அரசின் ஹரிவராசனம் விருதுக்கு இளையராஜா தேர்வு செய்யப்பட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

இசையில் பெரிய பங்களிப்பை செய்தவர்களுக்கு 2012-ம் ஆண்டில் இருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. முதல் தடவையாக பின்னணி பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் இந்த விருதை பெற்றார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோரும் ஹரிவராசனம் விருதை வாங்கி உள்ளனர். கடந்த ஆண்டு பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கும் விழா சபரிமலை சன்னிதான வளாகத்தில் நடந்தது. இதில் கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் கலந்து கொண்டு இளையராஜாவுக்கு விருது வழங்கினார்.

இளையராஜா ஏற்கனவே பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் பெற்றுள்ளார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுகளும் வாங்கி இருக்கிறார். சிறந்த இசைக்கான கேரள அரசு விருதை 3 முறை பெற்றுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் உயரிய விருதான நந்தி விருதையும் வாங்கி இருக்கிறார்.

மேலும் செய்திகள்