இந்தியன்–2 படப்பிடிப்பில் இணைந்தார் 85 வயது மூதாட்டியாக காஜல் அகர்வால்?

நடிகை காஜல் அகர்வால் இந்தியன்–2 படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

Update: 2020-02-10 23:00 GMT
‌ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்–2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். சென்னையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு ஐதராபாத், ராஜமுந்திரி சிறைச்சாலை, போபால் ஆகிய இடங்களில் நடந்தது. 

கமல்ஹாசன் 90 வயது முதியவராக வந்து  வர்ம கலையால் வில்லன்களுடன் மோதுவதுபோன்ற காட்சிகளை படமாக்கினர். அப்போது கமல்ஹாசனின் வயதான தோற்றத்தை யாரோ செல்போனில் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அந்த புகைப்படம் வைரலானது.

பின்னர் கமல்ஹாசனுக்கு ஆஸ்பத்திரியில் காலில் சிறிய அறுவை சிகிச்சை நடந்ததால் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தினர். சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகு இப்போது மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் படப்பிடிப்பு நடக்கிறது. அங்கு பிரமாண்ட அரங்குகள் அமைத்து முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். 

தற்போது நடிகை காஜல் அகர்வாலும் இந்தியன்–2 படப்பிடிப்பில் இணைந்துள்ளார். அவர் தற்காப்பு கலைகள் தெரிந்த 85 வயது மூதாட்டியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டூடியோவில் உள்ள அறையில் காஜல் அகர்வால் மேக்கப் போடுவதுபோன்ற படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தனது முகத்தை மறைத்தபடி அந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்