உண்மை சம்பவம் படமாகிறது; 20 சர்வதேச பட விழாக்களில் விருதுகளை அள்ளிய ‘கயிறு’

உலகம் முழுவதும் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுக்கு மேல் விருதுகளை வென்ற படம், ‘கயிறு.’ டைரக்டர் பாசிலிடம் உதவி டைரக்டராக இருந்த கணேஷ், இந்த படத்தை டைரக்டு செய்திருக்கிறார். ‘கயிறு’ பற்றி இவர் கூறுகிறார்:-

Update: 2020-02-28 05:00 GMT
குணா - காவ்யா மாதவ்
‘‘தமிழ் கலாசாரத்தின் முக்கியத்துவத்தையும், அதை போற்றி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், ‘கயிறு’ படம் உணர்த்தும். என் படம், தினமும் வீடு வீடாக சென்று குறி சொல்லும் பூம் பூம் மாட்டுக்காரனை பற்றியது. அவனுக்கு ஒரு பெண் மீது காதல் வருகிறது. அந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டு மென்றால், அவன் தன் தொழிலை கைவிட வேண்டும். அவன் மிகவும் நேசிக்கும் காளை மாட்டையும் இழக்க வேண்டும்.

இவை அனைத்தும் அவனை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளுகிறது. அவன் என்ன முடிவெடுக்கிறான்? என்பதே கதை. இந்த படம் கலாசாரத்தை பற்றி மட்டும் பேசவில்லை. மாறாக, விலங்குகளிடம் அன்பாக இருக்க வேண்டும் என்ற தேவை குறித்தும் பேசும். நமது கலாசாரம், முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற பொக்கிஷம் என்பதை அழுத்தமாக கூறியிருக்கிறேன். பெண் களுக்கு சின்ன வயதிலேயே திருமணம் செய்து வைக்க கூடாது என்ற கருத்தையும் எடுத்து சொல்கிறது.

உலகம் முழுவதும் நடந்த 20 சர்வதேச திரைப்பட விழாக்களில், ‘கயிறு’ திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், படத்தின் இணை தயாரிப்பாளர் குணா, காவ்யா மாதவ், சேரன்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.’’ 

மேலும் செய்திகள்