நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது பாக்யராஜ் அணியினர் புகார்

நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது பாக்யராஜ் அணியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-03-11 22:30 GMT
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில் டைரக்டர் பாக்யராஜ் மற்றும் அவரது சங்கரதாஸ் அணியை சேர்ந்த ஐசரி கணேஷ், உதயா, சங்கீதா, ஆரி, நிதின் சத்யா உள்ளிட்டோர் நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியை சந்தித்து பேசினார்கள்.

அப்போது நடிகர் சங்கத்தில் ஓய்வூதியம் பெறுவோர் பட்டியலை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டனர். ஆனால் அந்த பட்டியல் அறக்கட்டளை நிர்வாகத்திடம் இருப்பதாகவும், நடிகர் சங்கத்துக்குத்தான் நான் தனி அதிகாரி என்றும் அவர் கூறிவிட்டார். பின்னர் பாக்யராஜ், ஐசரி கணேஷ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

“நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் உதவித்தொகை பெற்று வந்தனர். பல மாதங்களாக இந்த தொகை அவர்களுக்கு கிடைக்காததால் கஷ்டத்தில் உள்ளனர். எனவே நாங்களே உதவித்தொகை வழங்க முடிவுசெய்து உதவித்தொகை பெறுவோர் பட்டியலை கேட்டோம். ஆனால் முன்னாள் நிர்வாகிகள் வழங்கவில்லை.

தற்போது சங்கத்தின் தனி அதிகாரியை சந்தித்து பட்டியலை கேட்டோம். அவரும் தன்னிடம் இல்லை என்று கூறிவிட்டார். ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் சங்கத்தின் அடையாள அட்டையை எங்களிடம் காண்பித்து உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம். தேர்தல் நடத்துவதற்கு தற்காலிமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம்.”

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்