மருத்துவர்களை தாக்குவதை கண்டித்த அனுபம்கேர், அனுஷ்கா சர்மா

உத்தரபிரதேசத்தில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை இந்தி நடிகர் அனுபம்கேர் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் கண்டித்துள்ளனர்.

Update: 2020-04-18 06:07 GMT
மும்பை,

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். ஆனால் சில இடங்களில் அவர்களை தாக்குவதாகவும், தரக்குறைவாக நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கொரோனாவால் உயிர் இழந்தவரின் குடும்பத்தினரை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடந்துள்ளது. கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இவ்வாறு மருத்துவர்கள் தாக்கப்படுவதை நடிகர்-நடிகைகள் கண்டித்துள்ளனர். பிரபல இந்தி நடிகர் அனுபம்கேர் தனது டுவிட்டர் பக்கத்தில், “மருத்துவர்களை சிலர் தாக்குவதை பார்த்து ஆத்திரம் அடைந்தேன். நமது உயிரை அவர்கள்தான் காப்பாற்றுகிறார்கள். அவர்களை எப்படி அவமதிக்கலாம்? மருத்துவர்கள் முகத்தில் ரத்தத்தை பார்த்தபோது மனதுக்குள் வலி ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்.

பிரபல இந்தி நடிகை அனுஷ்கா சர்மா கூறும்போது, “கொரோனா நோயாளிகளை காப்பாற்ற போராடும் மருத்துவர்களை அவமரியாதையாக நடத்துவது வேதனை அளிக்கிறது. தற்போதையை சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாகவும், ஒற்றுமையோடும் இருப்பது முக்கியம்” என்றார்.

மேலும் செய்திகள்