'மருத்துவர்கள் நடமாடும் தெய்வங்கள்' நடிகர் விவேக் உருக்கம்

'மருத்துவர்கள் நடமாடும் தெய்வங்கள்' என நடிகர் விவேக் கூறியுள்ளார்.

Update: 2020-04-21 06:08 GMT
சென்னை,

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்த டாக்டரின் உடலை கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ மயானத்தில் நல்லடக்கம் செய்யவிடாமல் ஒரு கும்பல் தடுத்தனர். உடலை கொண்டு வந்தவர்கள் மீது கல்வீசி தாக்குதலும் நடத்தினர். இதில், உடல் கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸ் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் போலீசார் உள்பட பலர் படுகாயமடைந்தனர். இதன்பின்னர், டாக்டரது உடல், அங்கு அடக்கம் செய்ய முடியாமல், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகி கடும் கண்டத்திற்குள்ளானது. 

இந்தநிலையில் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:-

நோயாளிகளை பாதுகாத்த போது மருத்துவர்களும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறக்கின்றனர். கொரோனா வைரஸ் இறந்தவர்களின் உடலில் இருந்து பரவாது. சடலத்தை எரித்தாலும், புதைத்தாலும் யாருக்கும் ஆபத்தில்லை. இதை தகுந்த ஆராய்ச்சிகளின் மூலம் வெளியான கருத்தையும், மருத்துவர்களிடமும் கேட்டறிந்து கூறுகிறேன். 

மருத்துவர்கள் இப்போது நடமாடும் தெய்வங்கள். இருக்கும் போது  கொண்டாட முடியாவிட்டாலும், இறந்த போதாவது அவர்களை அவமானப்படுத்த வேண்டாம். இறந்த  மருத்துவர்களுக்காக பிரார்த்திப்போம். அவர்களின் குடும்பத்திற்கு இது மிகுந்த மனவருத்தத்தை கொடுத்திருக்கும். நாம் ஆறுதல் சொல்வோம். மனித நேயத்தை காப்போம். 

இவ்வாறு விவேக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்