மருத்துவர் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தது வெட்கக்கேடு குஷ்பு-சசிகுமார் வருத்தம்

மருத்துவர் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தது வெட்கக்கேடு என நடிகர் குஷ்பு மற்றும் சசிகுமார் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-04-23 04:59 GMT
சென்னை,

கொரோனா வைரஸ் பாதிப்பில் இறந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்யவிடாமல் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பலரும் கண்டித்து வருகிறார்கள். நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

நாம் எந்த மாதிரி உருவாகிக்கொண்டு இருக்கிறோம்? பல உயிர்களை காப்பாற்றுவதற்காக ஒரு மனிதர், தனது உயிரை கொடுத்து இருக்கிறார். அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யவிடாமல் படிப்பறிவில்லாத கூட்டம் அல்லது குண்டர்கள், ரவுடிகள் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். அந்த கூட்டம் தடுத்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் நாம் வாழ்வதற்காக வெட்கப்பட வேண்டும். இறப்பு என்பது மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும். அதை செய்யவிடவில்லை. இது குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு கூறியுள்ளார்.

நடிகர் சசிகுமார் வீடியோவில் பேசி இருப்பதாவது:-

கொரோனா கொடிய நோய். ஒன்றரை மாதமாக நம்மை வீட்டில் இருக்க சொல்லி விட்டு டாக்டர்களும், நர்சுகளும் அவர்கள் உயிரை பணயம் வைத்து நமது உயிரை பாதுகாக்கிறார்கள். இப்போது கேள்விப்படும் சம்பவம் (டாக்டர் உடல் அடக்கத்துக்கு எதிர்ப்பு) மிகவும் வருத்தம் அளிக்கிறது. நமது உயிரை காப்பாற்றுபவர்களை நாம்தான் மதிக்க வேண்டும்.

இந்த சம்பவத்துக்காக மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மக்கள் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இதுமாதிரி சம்பவங்கள் இனிமேல் நடக்க கூடாது. நம்மை பாதுகாக்கும் மருத்துவர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்களை நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மனிதம் வளர வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்