பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்க முன்வந்த கனிகா கபூர்

பாலிவுட் பாடகி கனிகா கபூர் தனது பிளாஸ்மாவை நான்கொடையாக வழங்க முன்வந்துள்ளார்.

Update: 2020-04-28 07:31 GMT
மும்பை,

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர் தனது பிளாஸ்மாவை நான்கொடையாக வழங்க முன்வந்துள்ளார்.

இந்நிலையில் பிளாஸ்மா தெரபி முறையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையின் கீழ் தனது பிளாஸ்மாவை கொரோனா பாதித்தவர்களுக்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நான் எனது இரத்தத்தையும் பிளாஸ்மாவையும் ஆராய்ச்சிக்காக கொடுக்க விரும்புகிறேன்.  மற்றவர்களுக்கு உதவ விரும்புகிறேன் என்று சொல்ல மருத்துவமனைக்கு வந்தேன். என்னால் முடிந்த உதவியைச் செய்ய விரும்புகிறேன். நேற்று எனது இரத்தத்தைக் கொடுத்துள்ளேன் என்றார்.

லக்னோவில் உள்ள கே. ஜி.எம்.யு., எனப்படும் கிங் ஜியார்ஜ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கனிகா கபூருக்கு முழு உடல் பரிசோதனை செய்த பின்னர் நாளை அல்லது நாளை மறுநாள் பிளாஸ்மா எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிளாஸ்மா சிகிச்சை என்பது, கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் ரத்தத்திலிருந்து ஆன்டிபாடிகளை பிரித்தெடுத்து, அதை கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, ரத்த அணுக்களும் அதிகரிக்கும். இதனால், கொரோனா வைரசை எதிர்த்து போராட உடல் தயாராகும்.

மேலும் செய்திகள்