ரிஷிகபூர் இந்தியாவின் இதயத்துடிப்பு; ஏ.ஆர்.ரகுமான் புகழாரம்

மறைந்த ரிஷிகபூர் இந்தியாவின் இதயத்துடிப்பு என ஏ.ஆர். ரகுமான் புகழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2020-04-30 12:02 GMT
சென்னை,

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சுமார் ஒரு வருடம் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

2018ஆம் ஆண்டு நியூயார்க்கிற்கு சிகிச்சைக்கு சென்ற அவர் கடந்த செப்டம்பர் மாதம் தான் இந்தியா திரும்பினார். கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதற்காக இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் நேற்று மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரிஷி கபூரின் மரணத்துக்கு பிரதமர் மோடியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்கள். பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

லாக்டவுன் நேரம் என்பதால், பிரபலங்கள் மரணித்தாலும், நேரடியாக சென்று இறுதி அஞ்சலி செலுத்த முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

நேற்று நடிகர் இர்பான் கான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ரிஷி கபூரின் மறைவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் இதயத்துடிப்பு, ராக்ஸ்டார் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை இன்று நம்மை விட்டுப் பிரிந்து சென்றார்.  நீங்கள் கொடுத்த சந்தோஷமான தருணங்களை எப்போதுமே நினைத்து தலைவணங்குவோம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்