நடிகர் ரிஷி கபூரின் உடல் தகனம் செய்யப்பட்டது

புற்றுநோயால் இன்று உயிரிழந்த பழம்பெரும் நடிகர் ரிஷி கபூரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Update: 2020-04-30 12:22 GMT
மும்பை,

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சுமார் ஒரு வருடம் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

2018ஆம் ஆண்டு நியூயார்க்கிற்கு சிகிச்சைக்கு சென்ற அவர் கடந்த செப்டம்பர் மாதம் தான் இந்தியா திரும்பினார். கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதற்காக இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.  நேற்று மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அமிதாப் பச்சன், நாகர்ஜுனா,மோகன்லால், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.

ரிஷி கபூருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவருடைய மகளான ரித்திமா கபூர், டெல்லியிலிருந்து மும்பை செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அவரால் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்கமுடியாமல் போனது.

இந்தநிலையில், ரிஷி கபூரின் உடல் இன்று மாலை மும்பையின் சந்தன்வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ரிஷி கபூர் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி நீது கபூர், மகன் ரன்பீர் கபூர், ரந்திர், ராஜிவ் கபூர், கரீனா, அர்மான், ஆதர் போன்றோரும் திரையுலகைச் சேர்ந்த அபிஷேக் பச்சன், ஆலியா பட், சயிப் அலி கான் போன்றோரும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் செய்திகள்