கமலின் ‘மருதநாயகம்’ மீண்டும் உருவாகுமா?

கமலின் ‘மருதநாயகம்’ மீண்டும் உருவாகுமா? என கேள்வி எழுந்துள்ளது.

Update: 2020-05-05 05:21 GMT
சென்னை,

கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் பட வேலைகள் 1997-ல் தொடங்கப்பட்டன. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பண பிரச்சினையால் நிறுத்தப்பட்டது. இந்த படத்தை மீண்டும் ஆரம்பிப்பேன் என்று கமல்ஹாசன் பல விழாக்களில் பேசி வந்தார். ஆனாலும் இன்னும் தொடங்கப்படவில்லை. 23 வருடங்களுக்கு முன்பே இந்த படத்தின் பட்ஜெட் மதிப்பீடு ரூ.100 கோடி. தற்போது படத்தை எடுக்க ரூ.300 கோடி வரை தேவைப்படும் என்று கூறப்படுகிறது. எனவே மருதநாயகம் மீண்டும் உயிர் பெறுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், கமல்ஹாசனிடம் மருதநாயகம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “மருதநாயகத்தை புத்தகமாக வெளியிடுவது என்றால் உடனே வெளிவந்து இருக்கும். படம் என்றால் பணம் வேண்டும். இன்னொன்று நான் நினைத்த மருதநாயகத்துக்கு 40 வயது. எனவே இந்த படத்தில் வேறு நடிகர் நடிக்க வேண்டும் அல்லது கதையை மாற்ற வேண்டும்” என்று கூறினார்.

இதில் எந்த முடிவை அவர் எடுப்பார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. கதையை மாற்றுவது என்றால் கமல்ஹாசனே படத்தில் நடிப்பார். இல்லையேல் வேறு நடிகர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. வேறு நடிகர் நடிப்பதாக இருந்தால் விக்ரமுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் தயாரித்த ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்து கமல்ஹாசன் பாராட்டை விக்ரம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்