மது வாங்கிய பெண்களை கேலி செய்வதா? இயக்குனருக்கு பாடகி கண்டனம்

மது வாங்கிய பெண்களை கேலி செய்வதா? இயக்குனருக்கு பாடகி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-06 04:57 GMT
சென்னை,

இந்தி, தெலுங்கு படங்களை இயக்கிய பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா. சூர்யா நடித்த ‘ரத்த சரித்திரம்’ தெலுங்கு படத்தை டைரக்டு செய்தவர். இந்த படம் தமிழில் வந்தது. சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை கதையையும் இயக்கி வெளியிட்டார். இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிடுவது வழக்கம். தற்போது பெண்கள் மது வாங்குவதை கேலி செய்து, எதிர்ப்பில் சிக்கி உள்ளார்.

கொரோனா ஊரடங்கை தளர்த்தியதும் கர்நாடகாவில் மதுக்கடைகள் முன்னால் கூட்டம் அலைமோதியது. இளம்பெண்களும் மது வாங்க திரண்டனர். அவர்களுக்கு தனி கியூவை உருவாக்கி இருந்தனர். பெண்கள் மது வாங்க கியூவில் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து “மதுபான கடைகள் முன்னால் யார் நிற்கிறார்கள் என்று பாருங்கள். குடிகார ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பேசி வருகிறோம்” என்று கேலி செய்து கருத்து பதிவிட்டு இருந்தார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசினர்.

இந்த நிலையில் ராம் கோபால் வர்மா கருத்துக்கு பிரபல இந்தி பாடகி சோனா மொகப்த்ரா வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘ஆண்களை போலவே பெண்களுக்கும் மதுபானம் வாங்குவதற்கும், குடிப்பதற்கும் உரிமை இருக்கிறது. குடித்து விட்டு வன்முறையில் ஈடுபடுவதுதான் தவறு’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்