இங்கிலாந்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனம் - வீடியோ

வாத்தி கம்மிங்' பாடலுக்கு வெளிநாட்டினர் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2020-05-10 12:22 GMT
லண்டன்,

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்து உள்ளார். ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் நடித்து உள்ளார்கள். இப்படத்தின் ஆடியோ வெளியீடு கடந்த மார்ச் 15 அன்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. 

இத்திரைப்படத்திலிருந்து முதல் பாடலான  ‘குட்டி ஸ்டோரி' பாடல் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியாகி இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, இந்த படத்தின் 2-வது பாடலான ‘வாத்தி கம்மிங்' என்ற பாடல், சென்னை லோக்கல் ஸ்லாங் பாடல் வரிகளுடன் அனைத்து தரப்பு மக்களாலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. 

அதன் பிறகு வாத்தி ரெய்டு, விஜய்சேதுபதியின் பொளக்கட்டும் பற பற போன்ற பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகியது.

இந்தநிலையில் டிக் டாக் செயலியில் மட்டும் 'மாஸ்டர்' பாடல்களுக்கு நடனமாடி பலரும் பதிவேற்றினர். இதில் மட்டும் 1.5 பில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது 'மாஸ்டர்' பாடல்களின் டிக்-டாக் வீடியோக்கள். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உறைந்தனர்.

இதனிடையே, தற்போது இங்கிலாந்து நாட்டில் வெளிநாட்டினர் பலரும் சமூக இடைவெளியுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடியுள்ளனர். முதலில் சிலர் நடனமாட, பின்பு ஒவ்வொருவராக இணைந்துள்ளனர். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த வீடியோவை மாஸ்டர் பட பாடல் உரிமையைப் பெற்ற சோனி நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, மாஸ்டர் பாடல்கள் பலருடைய இதயங்களை வென்றுள்ளதாக தெரிவித்திருக்கிறது. அதேபோல் இந்த வீடியோவை இசையமைப்பாளர் அனிருத்தும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை இசையமைப்பாளர் அனிருத்தும் தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

இன்னும் 'மாஸ்டர்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் சுமார் 20 நாட்கள் பாக்கியுள்ளது. நாளை (மே 11) முதல் தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், 'மாஸ்டர்' படத்தின் பணிகளைத் தொடங்கி முடித்து, முதல் பிரதியைத் தயார் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்