கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் பாடகி சின்மயி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் பாடகி சின்மயி களம் இறங்கி உள்ளார்.

Update: 2020-05-14 07:20 GMT
சென்னை,

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏழைகள் மற்றும் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத நிலையில் பலர் பரிதவிக்கிறார்கள். இத்தகைய ஏழைக்கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக நடிகர்கள், நடிகைகள் நிதி உதவி திரட்டியும், உணவுகளையும் வழங்கி வருகின்றனர். அந்தவகையில் பாடகி சின்மயி,  பாடல்களை பாடி நிதி திரட்டி மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனால், 1,100-க்கும் மேலான குடும்பங்கள் இதுவரை பயன்பெற்றுள்ளதாகவும், இதற்காக, கடந்த ஒரு மாதத்தில் 1,700-க்கும் அதிகமான பாடல்களை வீட்டில் இருந்தபடியே பாடி வீடியோ பதிவாக உருவாக்கியுள்ளார். 

இதுதொடர்பாக பின்னணி பாடகி சின்மயி கூறியதாவது:

ஊரடங்கு தொடங்கிய நேரத்தில் வீட்டில் இருக்கிறோமே என சில பாடல்களை பாடி இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டரில் பதிவிடத் தொடங்கினேன். அதற்கு நிறைய பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. ஒருகட்டத்தில் பலரும் தங்களுக்கு விருப்பமான பாடல்களைக் கூறி,அதைப் பாடுங்கள் என்று பதிவிடத்தொடங்கினர். அதற்கு நானோ,‘உங்களுக்கு பிடித்த பாடல்களைநான் பாடுகிறேன். அதற்கு பதிலாக இந்த பேரிடர் நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகஉதவி செய்ய நீங்கள் நிதி தரலாமே?’ என பதிவிட்டேன். அதற்கு பலரும் சம்மதம் தெரிவித்தனர்.

அப்படி தொடங்கிய பாடல் பயணம் தான் இது. இதுவரை 1,100-க்கும் மேலான ஏழைக் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. மக்களுக்கு நேரடியாக கிட்டத்தட்ட ரூ.30 லட்சம்வரை நிதி உதவி சென்றுள்ளது. அன்றாடத் தேவைகளுக்கே சிரமப்படும் குடும்பங்களைக் கண்டுபிடித்து என் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர்களது விவரங்களைப் பதிவிடுகிறேன். உதவ முன் வருபவர்கள் நேரடியாகஅவர்களது வங்கிக்கணக்குக்கு நிதியை அளித்துவிட்டு அந்த ரசீதை என் மின்னஞ்சல் பக்கத்துக்கு அனுப்பினால் போதுமானது.

இந்தப் பணி மிகவும் திருப்தியாக இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சிரமப்பட்டு வரும் மீனவர்கள் குடும்பம், நாட்டுப்புற பாடகர்கள், மேடை நாடகக் கலைஞர்கள் குடும்பம் என பலரும் இதன் வழியே பயன் பெற்று வருகின்றனர். 

இசையமைப்பாளர் அனிருத், யுடியூப் சேனலை தொடங்கி நேரலை இசை நிகழ்ச்சி மூலம் பாட்டுப்பாடி கொரோனாவுக்கு நிதி திரட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்