“எனது ஆதரவற்றோர் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா” - நடிகர் லாரன்ஸ் வருத்தம்

தனது ஆதரவற்றோர் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா உள்ளதாக நடிகர் லாரன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-30 00:53 GMT

நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண உதவி வழங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் நடத்தும் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து லாரன்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு கடிதத்தை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

“நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் நான் தெரிவித்துக்கொள்வது. ஆதரவற்ற குழந்தைகளுக்காக நான் அறக்கட்டளை நடத்துவதை நீங்கள் அறிவீர்கள். ஒரு வாரத்துக்கு முன்பு குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்தது. பரிசோதனையில் 18 குழந்தைகளுக்கும் 3 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதில் இருவர் மாற்றுத்திறனாளி ஊழியர்கள். இது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது. தற்போது காய்ச்சல் குறைந்துள்ளது. குழந்தைகள் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். வைரஸ் நெகட்டிவ் வந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் உடனடியாக உதவி செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதார அமைச்சரின் உதவியாளர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு நன்றி. நான் செய்யும் சேவைகள் எனது குழந்தைகளை காக்கும் என்று நம்புகிறேன்” என்று லாரன்ஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்