நடிகர் பார்த்திபன் கவிதை “கொரோனாவில் இருந்து சென்னை மீண்டு வரும்”

நடிகர் பார்த்திபன் கவிதை வடிவில் சென்னை நகரின் மகிமையை விளக்கியும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியும் ஆடியோ வெளியிட்டு உள்ளார்.

Update: 2020-07-09 06:25 GMT
சென்னையில் கொரோனா பரவல் தீவிரமானதையடுத்து பலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதைவைத்து மீம்ஸ்களும் வந்தன. இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் கவிதை வடிவில் சென்னை நகரின் மகிமையை விளக்கியும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியும் ஆடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-

“சென்னை தன்னை பற்றி என்னை விட்டு சொல்ல சொன்ன கவிதையிது. தடைகள் ஆயிரம் தகர்த்தவன். படைகள் ஆயிரம் பார்த்தவன். பஞ்சம் கண்டவன், பகையும் கண்டவன். பேரலையும் கண்டவன். பேரிடரையும் கண்டவன். பெயர் மாறி உருமாறி வலுவானவன். எது வந்த போதிலும் நிறம் மாறாதவன். வந்தவர் எத்தனை? போனவர் எத்தனை? கண்டது எத்தனை? கொண்டது எத்தனை? என் பலம் எனதல்ல. என்னில் இரண்டற கலந்து வாழும் என் மக்களே என் பலம். நீரால், நெருப்பால், நிலத்தால் காற்றால் எவ்வழி இடர் வரினும் தளர் வரினும் என் கரம் இறுக பற்றும் என் மக்களே என் பலம். என் மக்கள் மனதில் தன்னம்பிக்கையும் முகத்தில் கவசம் அணிந்து கொண்டு சமூக விலகலோடு.. இன்றைக்கும் என்றைக்கும் எனக்கு தோள் கொடுப்பர். வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன். நான் சென்னை, என்னை வீழ்வேன் என்று நினைத்தாயோ மீண்டு வருவேன் நான் சென்னை.”

இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்