தமிழக அரசிடம் இருந்து படப்பிடிப்புக்கு அனுமதியை எதிர்பார்க்கிறோம் - நடிகர் விஷால்

தமிழக அரசிடம் இருந்து படப்பிடிப்புக்கு அனுமதியை எதிர்பார்க்கிறோம் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

Update: 2020-08-24 21:23 GMT
சென்னை,

கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் முடங்கி உள்ளது. ஐந்து மாதங்களாக படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இதனால் திரைப்பட தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கிறார்கள். தயாரிப்பாளர்களும் பாதியில் நின்று போன படங்களின் படப்பிடிப்புகளை முடிக்க முடியாமல் உள்ளனர். தமிழக அரசு தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதிய விதிமுறைகளோடு சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. உள்ளூரில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கலாம் என்றும் கூறியுள்ளது.

இதையடுத்து விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், “சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி. இது நம்பிக்கை அளித்துள்ளது. அனைத்து படப்பிடிப்பு குழுவினரும் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று நம்புகிறேன். அதுமட்டுமன்றி தமிழக அரசிடம் இருந்து இதற்கான பாதுபாப்புக்குரிய விதிகளுடன் கூடிய அனுமதியை எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

அடுத்த மாதம் 1-ந்தேதியில் இருந்து சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கும் என்று திரையுலகினர் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்