ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள ‘அண்டாவை காணோம்’ படத்தை வெளியிட தடை - ஐகோர்ட்டு உத்தரவு

அண்டாவை காணோம் திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-08-26 00:00 GMT
சென்னை,

கொரோனா ஊரடங்கினால் திரையரங்குகள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. இவை எப்போது திறக்கும் என்பதும் தெளிவாக தெரியவில்லை. இதனால் ஏற்கனவே தயாரித்து ரிலீஸ் செய்வதற்கு தயாராக உள்ள திரைப்படங்களை இணைய தளங்களில் (ஓ.டி.டி.) தயாரிப்பாளர்கள் வெளியிடுகின்றனர்.

அந்த வகையில் ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள ‘அண்டாவை காணோம்’ என்ற திரைப்படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்போவதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து இந்த திரைப்படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடைக்கேட்டு சென்னை ஐகோர்ட்டில் சங்கைய்யா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், ‘திரைப்படம் தயாரிப்புக்காக ‘அவுட்டோர் யூனிட்’ உபகரணங்களை சப்ளை செய்கிறேன். ‘அண்டாவை காணோம்’ படத்தை தயாரிக்க என்னிடம் தயாரிப்பாளர் கடன் பெற்றுள்ளார். ஆனால் வாடகை மற்றும் கடன் தொகையை திருப்பித்தராமல் இந்த படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் முயற்சிக்கிறார். இந்த தளத்தில் திரைப்படத்தை வெளியிட தணிக்கைக்குழுவின் சான்றிதழ் தேவையில்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘அண்டாவை காணோம்’ திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கிற்கு தயாரிப்பாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 8-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்