கண்ணாடியை மாட்டி பாக்யராஜை நடிகராக மாற்றிய அனுபவம்: பாரதிராஜாவின் மலரும் நினைவு

கண்ணாடியை மாட்டி பாக்யராஜை நடிகராக மாற்றிய அனுபவம் குறித்த பாரதிராஜா, தனது மலரும் நினைவுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

Update: 2020-10-15 00:30 GMT

டைரக்டர் பாரதிராஜா இணையதள சேனலில் தனது சினிமா வாழ்க்கை அனுபவங்களை மலரும் நினைவுகளாக வெளிப்படுத்தி வருகிறார். புதிய வார்ப்புகள் படத்தில் பாக்யராஜை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது குறித்து அவர் பேசி இருப்பதாவது:-

“நான் இயக்கிய 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய 3 படங்களும் வெற்றி பெற்றதும் புதிய வார்ப்புகள் படத்தை எடுக்க தயாரானேன். படத்தின் கதாநாயகன் ஒரு வாத்தியார் கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர்களுக்கு உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ் வசனம் சொல்லி கொடுத்து கொண்டு இருந்தார். அப்போது பாக்யராஜ் தோற்றம் ஒல்லி குச்சி போல் இருக்கும். நான் பாக்யராஜிடம், இந்த வாத்தியார் கதாபாத்திரத்தை நீயே செய்ய கூடாதா? என்றேன். என்ன சார் என்று பதறினார். வாத்தியார் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணமா இருக்கிறது. நீ நடி என்று சொன்னேன். பக்கத்தில் கண்ணாடி போட்டுக்கொண்டிருந்தவரிடம் கண்ணாடியை வாங்கி பாக்யராஜுக்கு போட்டு விட்டேன். பாக்யராஜுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஏதோ கேலி செய்வதாக நினைத்தார். ரதியை கதாநாயகியாக தேர்வு செய்தேன். படத்தில் பாக்யராஜுக்கு கங்கை அமரன்தான் டப்பிங் கொடுத்தார். ஆரம்பத்தில் கங்கை அமரனை நடிக்க வைக்கலாமா? என்றும் யோசனை இருந்தது. பிறகு பாக்யராஜை நடிக்க வைத்தேன். அதன்பிறகு பாக்யராஜும் ரதியும் பெரிய உச்சத்துக்கு போய் பெயரும் புகழும் பெற்று விட்டார்கள்.”

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்