‘கருப்பன் குசும்புக்காரன்’ வசனம் மூலம் பிரபலமானவர்: மதுரையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற நடிகர் தவசி மரணம்

மதுரையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி மரணம் அடைந்தார்.

Update: 2020-11-23 22:01 GMT
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மட்டப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் தவசி (வயது 61). இவர் ‘கிழக்கு சீமையிலே’ சினிமா மூலம் நடிகராக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடிகர் சூரியின் தந்தையாக நடித்து, ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று அவர் பேசிய வசனம் பிரபலமானது. ரஜினிகாந்த் நடித்துவரும் ‘அண்ணாத்த’ படத்திலும் தவசி நடித்து வந்தார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது நடத்திய பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து புற்றுநோய்க்கு தவசி சிகிச்சை எடுத்து வந்தார். கடைசியாக மதுரை நரிமேடு பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தவசி, நேற்று இரவு மரணம் அடைந்தார். தவசிக்கு அங்கம்மாள் என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இரங்கல்

‘கிழக்கு சீமையிலே’ படத்தில் தொடங்கி ‘அண்ணாத்த’ வரை 140-க்கும் மேற்பட்ட படங்களில் தவசி நடித்துள்ளார். அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, அவருக்கு தேவையான உதவிகளை திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் செய்து கொடுத்து வந்தார்.

இதுபோல், தவசி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், மருத்துவமனை செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படும் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் திரைத்துறையினர் உதவி செய்ய வேண்டும் என கேட்டிருந்தார். அந்த பதிவினை தொடர்ந்து நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் அவருக்கு பணஉதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தவசியின் மரணத்துக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதே போல் சமூக வலைத்தளங்களிலும் பலர் இரங்கல் பதிவிட்டு வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு, சொந்த ஊரில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்