கொரோனாவுடன் சேர்த்து கரீனாவையும் சமாளிக்க வேண்டியிருந்தது -அமீர்கான் நகைச்சுவை

கொரோனாவுடன் சேர்த்து கரீனாவையும் சமாளிக்க வேண்டியிருந்தது என, லால் சிங் சத்தா பட அனுபவங்களை நடிகர் அமீர்கான் பகிர்ந்து கொண்டார்

Update: 2021-04-13 12:37 GMT
மும்பை

பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் நடிகை கரீனா கபூர் நடிப்பில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த படம் டாம் ஹாங்க்ஸ் கதாநாயகனாக நடித்த ஹாலிவுட் ஹிட் திரைப்படமான ‘பாரஸ்ட் கம்பி’ன் ரீமேக் .

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்ட அமீர்கான்  பாரஸ்ட் கம்ப் படம் ஒரு இறகுடன் தொடங்குகிறது. அந்த இறகு வானத்திலிருந்து கீழே மிதக்கிறது. அது மக்களின் தோள்களுக்கு மேலே சென்று ஒரு காரின் மீது விழுகிறது. காற்று அந்த இறகை அங்கும் இங்கும் தள்ளுகிறது. இதுதான் படத்தின் சாரம்.

இந்த படத்தை எடுத்தபோது, எங்கள் வாழ்க்கையும் ஒரு இறகு போல மாறிவிட்டதை உணர்ந்தோம். வெவ்வேறு காற்றுகள் நம்மை வெவ்வேறு திசைகளில் தள்ளுகின்றன. நாம் அதனுடன் பயணிக்கிறோம். முடிவில் ஒரு இடத்தில் இறங்குகிறோம்" என்று அவர் தனது ரசிகர் மன்றத்தின் யூடியூப்பில் வெளியிட்ட வீடியோவில் கூறினார். இந்த காணொலியின்போது அவரது மனைவியும், திரைப்படத் தயாரிப்பாளருமான கிரண் ராவும் அவருக்கு அருகில் இருந்தார்.

படப்பிடிப்பு அனுபவங்கள் பற்றி நகைச்சுவையாக பேசிய அமீர்கான் உலகமே கொரோனாவை சமாளித்துக்கொண்டிருந்தபோது, நாங்கள் கொரோனாவுடன் சேர்த்து நடிகை கரீனாவையும் சமாளித்துக்கொண்டிருந்தோம். ஏனென்றால் படப்பிடிப்பின்போது கரீனாகபூர் கர்ப்பிணியாக இருந்தார். அதனால் அவர்மீது அதிக அக்கறை எடுத்துக்கொண்டோம் எனக் கூறினார். படம் இந்த ஆண்டின் கிறிஸ்துமசுக்கு வெளியாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்