கொரோனா தொற்றுடன் நிவேதா தாமஸ் தியேட்டரில் படம் பார்த்ததாக எதிர்ப்பு

கொரோனா தொற்றுடன் நிவேதா தாமஸ் தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-04-14 06:12 GMT
தமிழில் குருவி, பாபநாசம், ஜில்லா, தர்பார் படங்களில் நடித்து பிரபலமான நிவேதா தாமஸ் கடந்த 3-ந்தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்காக தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவ விதிமுறைகளையும் கடைப்பிடிக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் முககவசம் அணியுங்கள்'' என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் பவன் கல்யாணுடன் நிவேதா தாமஸ் இணைந்து நடித்த வக்கீல் சாப் என்ற தெலுங்கு படம் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்த படத்தை நிவேதா தாமஸ் தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகைப்படத்தில் தியேட்டரின் கடைசி இருக்கை அருகே முககவசம் அணிந்து சுவரில் சாய்ந்தபடி நின்று அவர் படம் பார்க்கிறார். கொரோனாவால் பாதித்த நிவேதா தாமஸ் ரசிகர்கள் உடல்நலனை கவனத்தில் கொள்ளாமல் தியேட்டருக்கு வந்தது கண்டிக்கத்தக்கது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெலுங்கானா டி.ஜி.பி. மற்றும் ஐதராபாத் போலீசாருக்கு டுவிட்டரில் பலர் வற்புறுத்தி உள்ளனர்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள நிவேதா தாமஸ் நான் படம் பார்த்தபோது எனக்கு கொரோனா தொற்று இல்லை. நான் பொறுப்பில்லாமல் நடக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். தொற்று இல்லை என்று வந்தாலும் தனிமையில் இருக்காமல் உடனே தியேட்டருக்கு வரலாமா? என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மேலும் செய்திகள்