கொரோனா தொற்றுக்கு நடிகர்-பட அதிபர் பலி

கொரோனா தொற்றுக்கு பழம்பெரும் மலையாள நடிகரும், பட அதிபரும் பலியானார்கள்.

Update: 2021-05-12 00:39 GMT
சூர்யா நடித்த கஜினி படத்தை தயாரித்தவர் சந்திரசேகர். மேலும் தனுஷ் நடித்த சுள்ளான் மற்றும் பிப்ரவரி 14, சபரி, கில்லாடி உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

சேலம் அழகாபுரத்தில் வசித்து வந்த சந்திரசேகருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி சந்திரசேகர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59.

இதுபோல் பழம்பெரும் மலையாள நடிகரும், திரைக்கதையாசிரியருமான மாதம்பு குன்சுகுட்டன் கொரோனாவுக்கு பலியானார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு திருச்சூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.

இவர் 2000-ல் வெளியான கருணம் படத்துக்கு சிறந்த திரைக்கதை எழுதியதற்காக தேசிய விருது பெற்றார். சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், தயாரிப்பாளர் பாபுராஜ், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் மரணம் அடைந்தனர். திரையுலகினர் கொரோனாவுக்கு அடுத்தடுத்து பலியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்