மிகவும் தவறான நடவடிக்கை...பினராயி விஜயன் பதவியேற்பு விழாவுக்கு பிரபல நடிகை கடும் எதிர்ப்பு

பதவியேற்பு விழாவை இணைய வழியாக நடத்துவதன் மூலம், அரசாங்கம் பிற அரசுகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நடிகை பார்வதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-05-18 12:40 GMT
திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி மீண்டும் அமோக வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளை இந்த  கூட்டணி கைப்பற்றியது. இதனால் பினராயி விஜயன் மீண்டும் முதல்வர் ஆவது உறுதியானது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் பினராயி விஜயன் பதவி ஏற்காமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் வரும் 20-ம் தேதி 21 மந்திரிகளுடன் பினராயி விஜயன் முதல்வராக பதவி ஏற்பதாக அறிவிக்கப்பட்டது.

 புதிய அரசாங்கத்திற்கான பதவியேற்பு விழா மே 20 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் நடைபெற உள்ளது. 700-800 விருந்தினர்களை அழைத்து பதவிப்பிரமாண விழாவை நடத்த கேரள அரசு ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்திய மருத்துவ சங்கம் இந்த நடவடிக்கையை விமர்சித்த பின்னர், விருந்தினர்களின் எண்ணிக்கை 500 ஆக குறைக்கப்பட்டது.

 5 ஆண்டுகளுக்கு முன்பு தமது அரசின் பதவியேற்பு விழாவில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும், அதே மைதானத்தில் 20ந்தேதி நடக்கவிருக்கும் அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தற்போது கேரளாவில் 3.62 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். தொற்று நோயை கட்டுப்படுத்தும் முயற்சியாக, மாநிலத்தில் நான்கு மாவட்டங்களில்  கட்டுப்பாடுகள் முன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில், முறையே 50 மற்றும் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்றும் மற்ற அனைத்து கூட்டங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான், வரவிருக்கும் அரசாங்கத்தின் பதவியேற்பு விழா 500 பேருடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

இதற்கிடையே, தற்போது 500 விருந்தினர்களுடன் பினராயி பதவியேற்பு விழா நடைபெற இருப்பது குறித்து நடிகை பார்வதி கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து இருக்கிறார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், "கொரோனா காலத்தில் கேரளா மாநில அரசு நம்பமுடியாத பணிகளைச் செய்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தொற்றுநோயை மிகவும் பொறுப்பான முறையில் எதிர்த்துப் போராடுவதற்கும், தொற்றை எதிர்க்க உழைக்கும் முன்கள பணியாளர்களுக்கு உதவுவதற்கும் இந்த அரசு தொடர்ந்து உதவுகிறது.

இந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை பார்த்த பிறகு, 500 பேர் கொண்ட கூட்டத்துடன் வரும் 20ம் தேதி பதவியேற்கும் விழாவை அரசே எடுத்து நடத்துகிறது என்ற அறிவிப்பை பார்க்கும்போது, அதிர்ச்சியாக இருக்கிறது. இதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இப்படி கூட்டம் கூடுவது, மிகவும் தவறான முடிவு.

இந்த முடிவை மாற்றிக்கொண்டு, பதவியேற்பை ஆன்லைனில் காணொலி விழாவாக நடத்துவதன் மூலம் ஒரு முன்மாதிரியை அமைக்க, வாய்ப்பு இருக்கிறது. எனவே தயவுசெய்து இந்த கோரிக்கையை பரிசீலித்து, 500 பேர் கலந்துகொள்ளும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


மேலும் செய்திகள்