நா.முத்துக்குமாரும், டைரக்டர் வசந்தபாலனும்...

‘‘நான் இயக்கிய ஜெயில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து திரைப்பிரவேசத்துக்கு காத்திருக்கிறது.

Update: 2021-06-13 01:08 GMT
டைரக்டர் வசந்தபாலன் கொரோனாவின் பிடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பி வந்து தனது வழக்கமான பணியில் ஈடுபட்டு இருக்கிறார். இவரும், மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரும் நெருங்கிய நண்பர்கள். நா.முத்துக்குமார் மீது கொண்ட நட்புக்கு உதாரணமாக வசந்தபாலன் இயக்கி வரும் புதிய படத்தில், ஒரு கவிதை போட்டி இடம் பெறுகிறது. இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-

‘‘நான் இயக்கிய ஜெயில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து திரைப்பிரவேசத்துக்கு காத்திருக்கிறது. அடுத்து ஒரு புதிய படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறேன். இந்த படத்தின் கதைப்போக்கில், கவிஞர் நா.முத்துக்குமாருக்கு நினைவேந்தல் செய்வதைப் போல் ஒரு கதாபாத்திரமும், சில காட்சிகளும் அமைந்துள்ளன.

இது யதேச்சையானதா அல்லது 25 ஆண்டு காலம் நா.முத்துக்குமாருடன் எனக்கு ஏற்பட்ட ஆழமான நட்பின் வெளிப்பாடா..? அல்லது இரண்டு பேருமே ஜூலை 12 என்ற ஒரே தேதியில் பிறந்ததனால் ஏற்பட்ட மானசீக உறவா? அல்லது நான் சோர்வாக வீட்டில் முடங்கிக்கிடந்த காலத்தில், உப்புக்கறியுடன் என்னை எழுப்பி பசியாற வைத்த நண்பன் மீது கொண்ட பாசமா? என்று தெரியவில்லை.

நா.முத்துக்குமார் கடல் அளவு கவிதைகள் எழுதி வைத்து இருக்கிறார். அதில் உள்ள ஒரு காதல் கவிதையை திரைப்பட பாடலாக மாற்ற வேண்டும். இதுவே போட்டி.’’ இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்