அண்ணாத்த ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது

அண்ணாத்த ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது.

Update: 2021-10-04 00:25 GMT
ரஜினிகாந்த் நடித்த அண்ணத்த படம் தீபாவளி போட்டியில் இருந்து பின்வாங்கி விட்டதாகவும் ஒரு மாதம் தாமதமாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு வாரமாக தகவல் பரவி வந்தது. ஏற்கனவே அண்ணாத்த தீபாவளிக்கு வரும் என்பதை பட நிறுவனம் 2 தடவை உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால் ரிலீசுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் படத்தை விளம்பர படுத்தும் பணிகளை படக்குழுவினர் தொடங்கவில்லை என்றும் சில மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கொரோனாவால் தியேட்டர்களை திறக்காத நிலையில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியானால் வசூலில் பாதிப்பை உண்டாக்கும் என்றும் எனவே அண்ணாத்தை ரிலீசை பொங்கல் பண்டிகைக்கு தள்ளிவைக்க படக்குழுவினர் ஆலோசிக்கின்றனர் என்றும் தகவல்கள் பரவின. பொங்கலுக்கு கொரோனா குறைந்து தமிழக தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று படக்குழுவினர் தரப்பில் எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று பட நிறுவனம் தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன் மூலம் அண்ணாத்த ரிலீசில் நிலவிய குழப்பம் தீர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்