கிடப்பில் போடப்பட்ட சங்கமித்ரா சரித்திர படம் மீண்டும் தொடங்குகிறது

கிடப்பில் போடப்பட்ட சங்கமித்ரா சரித்திர படம் மீண்டும் தொடங்க படக்குழுவினர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-12-03 12:10 GMT
நகைச்சுவை, காதல், பேய் படங்களை எடுப்பதில் பிரபலமான சுந்தர்.சி முதல் தடவையாக 8-ம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து சங்கமித்ரா என்ற சரித்திர கதையை படமாக்குவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார். 

இதில், ஜெயம்ரவி, ஆர்யா, சுருதிஹாசன் உள்ளிட்டோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டு, அதன் போஸ்டர்களும் கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த படத்துக்கு ரூ.400 கோடி வரை செலவாகலாம் என்று மதிப்பிடப்பட்டது. பாகுபலி, பொன்னியின் செல்வன், கே.ஜி.எப் படங்களுக்கு இணையாக கிராபிக்ஸ் காட்சிகள் வைக்கவும் முடிவு செய்தனர். 

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டனர். ஆனால் பண பிரச்சினையால் நீண்ட நாட்களாக படப்பிடிப்பை தொடங்காமல் கிடப்பில் போட்டனர். இதனால் சுருதிஹாசன் படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இந்தி நடிகை திஷா பதானியை தேர்வு செய்தனர். படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலையும் சுந்தர்.சி மறுத்தார். 

தற்போது சங்கமித்ரா பட பணிகளை மீண்டும் தொடங்க படக்குழுவினர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு தேதி மற்றும் இறுதி செய்யப்பட்ட நடிகர், நடிகைகள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்