காதலன் மீது புகார் கொடுத்த ஜூலி; காதலன் கூறிய தகவல்களால் குழப்பமடைந்த போலீசார்

போலீசார் நடத்திய விசாரணையில் ஜூலியின் காதலன் மனீஷ் கூறிய தகவல்கள் போலீசாரையே குழப்பமடைய வைத்திருக்கிறது.

Update: 2021-12-05 05:09 GMT
சென்னை,

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானவர் ஜூலி. அந்த புகழ், அவரை இளைஞர்கள் மத்தியில் டிரெண்ட் செய்தது மட்டுமின்றி, பிக்பாஸ் நிகழ்ச்சி வரை கொண்டு போய் சேர்த்தது. ஒரு நர்ஸ்சாக இருந்தபோதும், குறும்படங்களில் நடித்து வந்த ஜூலிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே பெரிய அளவில் பிரபலமானார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்தார். பின்னர்  சினிமா படம் ஒன்றில் அம்மன் வேடமிட்டு நடித்தார். அதன்பின்னர், ஜூலி மாடலிங்கில் படு பிசியாகிவிட்டார். ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு படு வேகமாக சமூகவலைத்தளத்தில் பிரபலமானார்.

இந்நிலையில், பிரபல அழகு நிலையத்தில் மேனஜராக வேலை பார்க்கும் மனிஷ் என்பவர், தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக  நடிகை ஜூலி சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தான் வாங்கிக் கொடுத்த நகை, பணம் மற்றும் பல்சர் பைக் உள்பட சுமார் இரண்டரை லட்சம் மதிப்புள்ள பொருட்களை மனீஷிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் என ஜூலி கூறியிருந்தார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மனீஷ் கூறிய தகவல்கள் போலீசாரையே குழப்பமடைய வைத்திருக்கிறது. ஜூலிக்கு ஏற்கனவே ஒரு காதலர் இருந்ததாகவும், 2017 ஆம் ஆண்டு அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்ட போது தான் மனீஷ் அறிமுகமாகியிருக்கிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஜூலியை காதலித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் தற்போது ஜூலி வேறு ஒரு ஆண் நண்பருடன் பழகி வருவதாகவும், இது குறித்து கேட்ட போது தன்னிடம் பேசுவதை ஜூலி நிறுத்திவிட்டதாகவும் மனீஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் ஜூலிக்கு அடிக்கடி போன் செய்ததால், தன்னை மிரட்டும் நோக்கில் ஜூலி தன் மீது போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் மனீஷ் கூறியுள்ளார். மேலும் ஜூலி தனக்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் மனீஷ் தானாக முன்வந்து போலீசில் ஒப்படைத்துள்ளார். 

காதலர்களாக இருந்த போது இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் போலீசாரிடம் ஒப்படைத்தார். அந்த புகைப்படங்கள் அனைத்தையும் அழித்த போலீசார், இருவருக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்