"நம் நாட்டிலே திறமையான கதாநாயகர்கள் இருக்க எதற்கு ஹாலிவுட் கதாநாயகர்கள்" - இயக்குனர் ராஜமவுலி

பத்திரிகையாளர் ஒருவர் ராஜமவுலியிடம்," நீங்கள் ஹாலிவுட் நடிகர்களை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள்" என கேள்வி எழுப்பினார்.

Update: 2021-12-12 13:49 GMT
சென்னை ,

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' (RRR). இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் வரும் ஜனவரி 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கான விளம்பரப் பணிகள் முழு மூச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக சமீபத்தில்  ராஜமவுலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இதில் பல்வேறு தகவல்களைப் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் ராஜமவுலியிடம் ," நீங்கள் ஹாலிவுட் நடிகர்களை வைத்து எப்போது ஹாலிவுட் அரங்கில் களமிறங்குவீர்கள்" என கேள்வி எழுப்பினார் .

இதற்கு பதில் அளித்த இயக்குனர் ராஜமௌலி " எதற்கு ஹாலிவுட் கதாநாயகர்கள் . நம் நாட்டில் நல்ல திறமையான கதாநாயகர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களை வைத்தே ஹாலிவுட் படங்களை எடுக்கலாம் " என அவர் பதில் அளித்தார்.

மேலும் அவர் "நான்கு வருடங்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன்.சென்னை வரும்போது பள்ளி மாணவனைப் போல் உணர்கிறேன். சென்னை எனக்கு ஒரு பள்ளியை போல்  அனைத்தையும் கற்றுக் கொடுத்தது. தமிழில் யாராக இருந்தாலும் என் கதை யாரை ஹீரோவாக தேர்வு செய்கிறதோ அவர்களை தான் நான் இயக்குவேன். பாகுபலியைப் போன்றே ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் நிச்சயமாக பேசப்படும்" என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்