நடிகர் மனோபாலா மறைவு : அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் இரங்கல்

மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

Update: 2023-05-03 10:42 GMT


Live Updates
2023-05-03 13:06 GMT

டைரக்டரும், நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மனோபாலா உடலுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் மனோபாலாவின் உடல் நாளை காலை 10.30 மணி அளவில் தகனம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், டைரக்டர் மனோபாலாவின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொண்டார். 

2023-05-03 11:31 GMT



2023-05-03 11:11 GMT

2023-05-03 11:07 GMT



2023-05-03 11:03 GMT

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

 தமிழ்த் திரைப்பட இயக்குனரும், நடிகரும், அருமை நண்பருமான மனோபாலா உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தகவல் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

1982-ல் ‘ஆகாய கங்கை’ திரைப்படத்தை இயக்கி, கலைப்பயணத்தை துவங்கிய அவரது மொத்த இயக்க படங்கள் 24–இல் நான் நடித்த ‘வெற்றிப்படிகள்’ திரைப்படமும் ஒன்று. நட்புக்காக, சமுத்திரம், திவான், காஞ்சனா, சென்னையில் ஒரு நாள், வைத்தீஸ்வரன் உட்பட பல திரைப்படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றிய தருணங்களை இப்போது நினைவுகூர்கிறேன்.

தமிழ்த் திரையுலகில் தனி அடையாளத்தை நிரூபித்து, ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி பிரிந்திருக்கும் மனோபாலாவின் மறைவால் வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று  கூறியுள்ளார்.

2023-05-03 10:46 GMT

சினிமா டைரக்டர் தயாரிப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் நடிகர் மனோபலா (69). தமிழில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேலாக குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வந்தார்.

மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

மனோபாலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

இந்த நிலையில் அவர் கடந்த 15 நாட்களாக கல்லீரல் பிரச்சினையால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கே சிகிச்சை முடித்த அவரை டாக்டர்கள் ஓய்வில் இருக்குமாறு கூறியுள்ளனர். இந்த நிலையில் இன்றைய தினம் அவர் காலமாகிவிட்டார்.

நடிகர் மனோபாலாவின் உடல் சாலிகாரமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.. அங்கே மனோபாலா உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விரைவில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் அனுமதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையே அவரது இறுதிச் சடங்கு குறித்த தகவல்களை வெளியாகியுள்ளது. அதன்படி வளரசவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் நாளை காலை 10 மணிக்கு மனோபாலா உடல் தகனம் செய்யப்படுகிறது என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மனோபாலா மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: "திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்;

அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்"

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: "தமிழ் திரைப்பட இயக்குனரும், பிரபல நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்;

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்"

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான மனோபாலா உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்;

அவரது குடும்பத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை: "பிரபல திரைப்பட இயக்குனரும், சிறந்த நடிகருமான மனோபாலா காலமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்;

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்"

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: எனது அன்பு நண்பர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட மனோபாலா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: தமிழ்திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார் என்பதை அறிந்து வருத்தம் அடைந்தேன்;

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், நண்பர்கள், தமிழ்த்திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கல்"

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்: "இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது;

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்"

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: காலத்தால் அழியாத கலைப்படைப்புகளைத் தந்த திரைப்பட இயக்குநரும், தனது நகைச்சுவை ததும்பும் நடிப்பால் மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகருமான என் பேரன்புக்குரிய அண்ணன் மனோபாலா மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

ரஜினிகாந்த் : மனோபாலாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்' என்று கூறியுள்ளார்.

டைரக்டர் டி.ராஜேந்தர்: இயக்குநரும் நடிகருமான மனங்கவர் மனோபாலா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை வருத்தியது. அவரை இழந்து வாடும் அவர்களின் இல்லதாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

டைரக்டர் பாரதிராஜா: "என் மாணவன் மனோபாலா மறைவு, எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்."

நடிகர் சூரி: "திறமையான இயக்குனர், கனிவான தயாரிப்பாளர், அருமையான நடிகர், அனைவருக்கும் பிடித்த மிகச்சிறந்த மனிதர் மனோபாலா;

அவரது இறப்பு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கும் பேரிழப்பு"

நடிகர் தம்பி ராமையா: மனோபாலாவின் இழப்பு, மிகப் பெரிய இழப்பு. அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்படாதவர் மனோபாலா. உழைக்காமல் அவரால் இருக்க முடியாது. விவேக், மயில்சாமி, மனோபாலா என அடுத்தடுத்த இறப்புகள் கொடுமையானது.

கவுதம் கார்த்திக்: மனோபாலா நம்மோடு இல்லை என்ற செய்தி என் இதயத்தை நொறுக்கியது. உங்களோடு பணியாற்றியது உண்மையில் ஒரு மகிழ்ச்சியான ஒரு தருணமாக இருந்தது. நிச்சயமாக உங்களை மிஸ் செய்வோம்.

சிங்கமுத்து: மனோபாலா எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியவர்; வரிசையாக சினிமா பிரபலங்கள் உயிரிழப்பது வருத்தமாக உள்ளது. எல்லாருக்காகவும் முன்நின்றவர் அவர்.

கார்த்தி: இந்தச் செய்தியை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். எல்லா இடங்களிலும் எல்லாருக்காகவும் இருந்த ஒரு மனிதர். உங்களை மிஸ் செய்கிறேன் மனோபாலா.

இயக்குநர் சேரன்: தாங்க முடியாத செய்தி. மனதை உலுக்கி எடுக்கிறது. நான் பெற்ற உங்கள் அன்பு மறக்க முடியாதது. போய் வாருங்கள் மாமா."

கவிஞர் சினேகன்: இயக்குநர், எழுத்தாளர், நடிகர் மாமனிதர் அண்ணன் மனோபாலாவின் மறைவு என்பது மனம் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் இழப்பாகவே நீள்கிறது. தம்பி என்று அவர் அழைக்கும்போது ஒரு தாய்மையின் உணர்வு தலைத்தூக்கி நிற்கும். மரணம் சில நேரங்களில் இப்படிதான் தவறு செய்துவிடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்