தென்னகத்து தாஜ்மஹால் என்று சினிமா ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டது, தூத்துக்குடி சார்லஸ். அது திரையரங்கம் அல்ல, ஓர் அரண்மனை என்று சொல்லும் அளவிற்கு அதன் பிரமாண்டத் தோற்றம் இருக்கும்.
"அழகு நிறைந்து விளங்கும் சார்லஸ் படமாளிகையைப் பார்த்தேன்; வியந்தேன், மகிழ்ந்தேன். இத்தகைய ஓர் அழகு மாளிகையை உருவாக்கிய தமிழகக் கலைஞர்களைப் பாராட்டுகிறேன். பெருமிதம் அடைகிறேன். இந்தப் படமாளிகையை அழகு குன்றாமல், பழுது நேராமல் பாதுகாத்து வருவது நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோரின் நீங்கா கடமையாகும்.
எத்தனையோ வகைகளில் தூத்துக்குடி தமிழ்நாட்டில் தலை சிறந்து விளங்குகிறது. தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 'தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்', 'தேச பக்தர் சிதம்பரனார்' ஆகியோரின் பெருமை கலை உலகிலும் அரசியல் உலகிலும் மங்காது சுடர் விட்டு ஒளிபரப்பி நிற்கின்றன. அதேப் போன்று இந்தப் பட மாளிகையின் சிறப்பும் அழியாது நிலைபெற்று விளங்குமென உறுதியாக நம்புகிறேன். வாழ்க சார்லஸ் தியேட்டர்"
இப்படி பாராட்டி இருப்பவர் வேறு யாரும் அல்ல; நாடக உலகின் தொல்காப்பியர் என்று போற்றப்பட்ட டி.கே. சண்முகம்தான். பல மேடைகள் கண்டவர். தமிழ் மூதாட்டி அவ்வையார் வேடத்தில் இயற்கையாக நடிப்பதற்காக அவர் தனது பற்களை பிடுங்கி எறிந்த அற்புதக் கலைஞர்.
17.9.1960 அன்று சார்லஸ் தியேட்டருக்கு நேரில் வருகைதந்த அவர் அங்கு இருந்த வருகைப் பதிவேட்டில் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார். அவரது குறிப்பில் இறுதியாக ஓர் இடத்தில் சார்லஸ் தியேட்டர் என்று எழுதி இருக்கிறாரேயொழிய மற்ற இடங்களில் எல்லாம் படமாளிகை என்றுதான் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
ஆம்! சார்லஸ் வெறும் திரையரங்கம் அல்ல; ஒரு படமாளிகைதான்! அதில் படம் பார்த்தவர்களுக்கு இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
1955-ம் ஆண்டு சார்லஸ் தியேட்டரின் கட்டுமானப்பணி தொடங்கியது.
அரை வட்டத்தில் மலர் இதழ் விரித்தாற்போல் வெளி நுழைவாயில். உள்ளே சென்றால், அரண்மனை முற்றத்தில் இருப்பதுபோல் அழகிய சிறு பூங்கா. பால்கனிகளுக்கு செல்ல தியேட்டரின் இருபுறமும் வளைந்து கலை நுட்பத்துடன் மேல் ஏறும் படிக்கட்டுகள். இடையில் பிருந்தாவனப் பூங்காபோன்று சறுக்கில் வழுக்கி ஓடும் தண்ணீரின் சலசலப்பு. அரங்கினுள் முன்புறம் மட்டும் அல்ல; இடப்புறமும், வலப்புறமும் முன்னோக்கி அமைக்கப்பட்ட பால்கனிகள். 1,383 இருக்கைகளுடன் அரண்மனை போல் வடிவமைக்கப்பட்டு இருந்த சார்லஸ் தியேட்டர், தூத்துக்குடி ரசிகர்களால் தென்னகத்தின் தாஜ்மஹால் என்று வர்ணிக்கப்பட்டது.
சேவியர் மிசியர், சிரில் மிசியர், அந்தோணிசாமி மிசியர் ஆகிய மூன்று சகோதரர்கள் அந்தத் திரையரங்கின் உரிமையாளர்கள். 1958-ம் ஆண்டு முதல் சார்லஸ் தியேட்டர் திரைப் பயணத்தைத் தொடங்கியது. முதல் படமாக 'எங்கள் வீட்டு மகாலட்சுமி' திரையிடப்பட்டது.
சகோதரர்களுக்கு இடையே பாகப்பிரிவினைக்கு பிறகு தியேட்டரை சேவியர் மிசியர் நிர்வகித்து வந்தார்.
இங்கே, சேவியர் மிசியரின் இளைய மகன் சார்லி பழைய நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
"எங்கள் திரையரங்கிற்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. 1960-ம் ஆண்டு கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த களத்தூர் கண்ணம்மா திரையிடப்பட்டது. அப்போது ஐந்து வயது சிறுவனாக இருந்த கமல், சார்லஸ் தியேட்டருக்கு வருகை தந்திருக்கிறார். 12.9.63 அன்று 'லயன்ஸ் கிளப்' மாநாடு சார்லஸ் தியேட்டரில் நடந்தது. மாநாட்டில் பங்கேற்பதற்கு நடிகர் ஜெமினிகணேசன், நடிகை சாவித்திரி ஆகியோர் வந்திருந்தனர்.
1973-ம் ஆண்டு 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை திரையிடுவதில் பல சர்ச்சைகள் இருந்தன. அப்போதைய தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட விநியோகஸ்தராக இருந்த சித்ரா பிலிம்ஸ் நிறுவனத்தாருடன் எம்.ஜி.ஆர். நேரடியாகத் தொடர்பு கொண்டு, சார்லஸ் தியேட்டரில் திரையிடுங்கள் என்று சிபாரிசு செய்தார். அதன்படி உலகம் சுற்றும் வாலிபன் திரையிடப்பட்டது. எங்கள் தந்தையோடு எம்.ஜி.ஆர். நெருங்கிய நட்போடு இருந்தார்.
1977-ம் ஆண்டில் '16 வயதினிலே' படம் ஓடியபோது தூத்துக்குடியில் அடைமழை பெய்து கொண்டிருந்தது. ஒருநாள் முதல் காட்சி நடக்குமா? நடக்காதா? என்பது கேள்விக் குறியாக இருந்தது. காரணம் மழை ஓயவில்லை. விடாமல் ஊற்றிக் கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் திடீர் என்று தியேட்டர் முன் ஆயிரக்கணக்கான குடைகள் தென்பட்டன. ரசிகர்கள் குடைகளைப் பிடித்தபடி கொட்டும் மழையிலும் திரண்டுவந்து படம் பார்க்கவந்த, அந்த நாளை எங்களால் மறக்க முடியாது.
1982-ம் ஆண்டு வாக்கில் 'சகலகலா வல்லவன்' ஓடிக்கொண்டு இருந்தது. அந்தப் படத்தில் கமல் பாடும் 'கட்ட வண்டி, கட்ட வண்டி...' என்ற பாடல் மிகவும் பிரபலமாகி இருந்தது. அப்போது ரசிகர்கள் மாட்டு வண்டிகளை பூட்டிவந்து படம் பார்க்க வந்தார்கள். கார், சைக்கிள்களைப் போல் அப்போது, தியேட்டரைச் சுற்றிலும் ஒரே மாட்டுவண்டிகளும், காளை மாடுகளுமாகக் காட்சி அளித்தன" என்று நினைவுகளை அசைப்போட்டார், சார்லி.
1979-ம் ஆண்டு சார்லஸ் தியேட்டர் அருகே மினி சார்லஸ் என்ற ஒரு தியேட்டர் புதிதாகத் தொடங்கப்பட்டது. சிவாஜி நடித்த 'நல்லதொரு குடும்பம்' அங்கு முதல் படமாகத் திரையிடப்பட்டது. தூத்துக்குடி மக்களின் அபிமான அரங்குகளாக இரு திரையரங்குகளும் விளங்கின.2002-ம் ஆண்டு சார்லஸ் தியேட்டரும் 2012-ம் ஆண்டு மினிசார்லஸ் தியேட்டரும் காலத்திற்கு ஏற்ப வணிக வளாகங்களாக உருமாறிவிட்டன.