நகைச்சுவை கலந்த திரில்லராக உருவாகியுள்ள "கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்"

"கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் " படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்று இயக்குனர் கே.ரங்கராஜ் கூறினார்.

Update: 2024-04-29 07:45 GMT

சென்னை,

ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மை இந்தியா மாணிக்கம் தங்களது முதல் தயாரிப்பாக தயாரிக்கும் படத்திற்கு " கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் " என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தை உன்னை நான் சந்தித்தேன்,உதயகீதம் ,உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் கே.ரங்கராஜ் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, கதாநாயகியாக பூஜிதா நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக பரதனும் இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேலும் நடித்துள்ளனர். மேலும், பார்கவ் , நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மை இந்தியா மாணிக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் கே.ரங்கராஜ் பேசியதாவது,

வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதாணமல்ல என்பதை உணர்த்தும் வகையில் வித்தியாசமாக இருவேறு கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இடம்பெறும் கிளைமாக்ஸ் காட்சிக்காக உண்மையான கிளைடர் பயன்படுத்தியுள்ளோம். அந்த காட்சிகளை திரையில் பார்க்க மிகவும் பிரமாண்டமாகவும், நகைச்சுவை கலந்த திரில்லராகவும் இருக்கும். அது மக்களிடையே பரபரப்பாக பேசப்படும்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடைபெற்றுள்ளது. இறுதிகட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கின்றன. விரைவில் இசைவெளியீட்டு விழா நடத்தி படத்தை திரையரங்குகளில் வெளியிட இருக்கிறோம். என்றார் 

Tags:    

மேலும் செய்திகள்