ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் வெளியீடு... இந்தியாவில் இருந்து எந்த படைப்புகளும் தேர்வாகவில்லை

இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Update: 2024-01-23 16:06 GMT

லாஸ்ஏஞ்சல்ஸ்,

சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து திரைப்பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

அந்தவகையில் 96வதுஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வருகிற மார்ச் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் அதிகபட்சமாக ஓப்பன்ஹெய்மர் படம் 13 பிரிவுகளிலும், புவர் திங்க்ஸ் படம் 11 விருதுகளுக்கும், கில்லர்ஸ் ஆப் தி ப்ளவர் மூன் படம் 10 விருதுகளுக்கும், பார்பி 8 விருதுகளுக்கும், மேஸ்ட்ரோ படம் 7 விருதுகளுக்கும் தேர்வாகி உள்ளன.

இந்த முறை இந்தியாவில் இருந்து எந்த படைப்புகளும் தேர்வாகவில்லை. அதே சமயம் இந்தியாவின் ஜார்கண்ட்டில் 13 வயது குழந்தைக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கனடா நாட்டின் 'டு கில் எ டைகர்' என்ற ஆவணப்படம், சிறந்த ஆவணப்படத்திற்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் இயக்குனர் நிஷா பஹுஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்