அமெரிக்காவின் அனோரா படத்துக்கு 'கோல்டன் பாம்' விருது

அமெரிக்க இயக்குநா் சியென் பேகா் இயக்கிய 'அனோரா' படத்துக்கு 'கோல்டன் பாம்' விருது வழங்கப்பட்டது.

Update: 2024-05-27 01:52 GMT

அமெரிக்காவின் அனோரா படத்துக்கு 'கோல்டன் பாம்' விருது வழங்கப்பட்டது. 77-வது கேன்ஸ் திரைப்பட விழா மே 14-ம் தேதிமுதல் 25-ஆம் தேதிவரை பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து திரைத் துறை பிரபலங்கள், ரசிகா்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனா். விருதுகளுக்குத் தோ்வு செய்யப்பட்ட பல்வேறு மொழித் திரைப்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன.

8 இந்திய அல்லது இந்திய கதைக் களம் சாா்ந்த படங்கள் நிகழாண்டு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேன்ஸ் திரைப்பட விழாவில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அடுத்த தலைமுறை கலைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் திரைப்பட கல்லூரி மாணவா்களுக்கு வழங்கப்படும் 'லா சினெப்' விருது பிரிவில் மைசூரு மருத்துவா் சித்தானந்த எஸ்.நாயக் இயக்கிய 'சன்பிளவா்ஸ் வோ் தி பா்ஸ்ட் ஒன்ஸ் டூ நோ' எனும் குறும்படம் முதல் பரிசை வென்றது.

திரைப்பட விழாவின் இறுதிநாளன்று, 'கோல்டன் பாம்', 'கிராண்ட் பிரிக்ஸ்' உள்ளிட்ட முக்கிய விருதுகள் வழங்கப்பட்டன. 'கோல்டன் பாம்' விருதுக்கான போட்டி பிரிவில் பயால் கபாடியாவின் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' எனும் இந்திய திரைப்படம் உள்பட 19 படங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அமெரிக்க இயக்குநா் சியென் பேகா் இயக்கிய 'அனோரா' படத்துக்கு கோல்டன் பாம் விருது வழங்கப்பட்டது.

ஆஸ்கா் விருதை வென்ற 'தி ஸோன் ஆப் இன்ட்ரெஸ்ட்', 'ஓல்ட்பாய்' உள்ளிட்ட படங்களைப் பின்னுக்குத் தள்ளி, இயக்குநா் கபாடியாவின் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' கிராண்ட் பிரிக்ஸ் விருதை தட்டிச் சென்றது. கோல்டன் பாம் விருதுக்கு அடுத்தபடியான அங்கீகாரமாக கிராண்ட் பிரிக்ஸ் விருது கருதப்படுகிறது.

ஹிந்தி மற்றும் மலையாள மொழியில் உருவான 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படமானது கடற்கரை நகரை நோக்கிய சாலைப் பயணத்தில் ஒரு மாய வனப் பகுதியை எதிா்கொள்ளும் 2 செவிலியா்கள், அங்கு தங்களின் கனவை நனவாக்கிக் கொள்கின்றனா் என்று கற்பனைக் களத்துடன் கூடிய பயணக் கதையாகும்.

விருதைப் பெற்றுக்கொண்டு மேடையில் பேசிய கபாடியா, 'எங்கள் படத்தைத் தோ்ந்தெடுத்ததற்கு கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு நன்றி. மற்றொரு இந்திய படத்தை அங்கீகரிக்க அடுத்த 30 ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டாம்' என்றாா். எப்டிடிஐ கல்லூரி முன்னாள் மாணவரான இயக்குநா் கபாடியாவின் 'எ நைட் ஆப் நோயிங் நத்திங்' படம் 2021 கேன்ஸ் திரைப்பட விழாவில் 'கோல்டன் ஐ விருதை' வென்றது குறிப்பிடத்தக்கது.

பல்கேரிய இயக்குநா் கான்ஸ்டான்டின் போஜனோவின் 'தி ஷேம்லெஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்திய தயாரிப்பு வடிவமைப்பாளா் சென்குப்தா, 'அன்சொ்டைன் ரிகாா்ட்' (மாறுபட்ட கதைக் களம்) பிரிவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றாா். சுரண்டல் மற்றும் துயரத்தின் இருண்ட உலகத்தில் 2 பாலியல் தொழிலாளா்களுக்கு இடையே உருவாகும் பிணைப்பு குறித்து தி ஷேம்லெஸ் படம் பேசுகிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகை விருதை வென்ற முதல் இந்தியரான சென்குப்தா தனது வெற்றியை மாற்றுப் பாலினத்தவா்களுக்கு அா்ப்பணிப்பதாக தெரிவித்தாா். 'சமத்துவத்துக்காகப் போராட நீங்கள் மாற்றுப் பாலினத்தவராக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. காலனித்துவம் பரிதாபகரமானது என்பதை அறிய, நீங்கள் காலனித்துவத்தில் அடிமைப்பட்டிருக்க வேண்டியதில்லை. நல்ல மனிதா்களாக இருந்தால் மட்டும் போதும்' எனவும் அவா் கூறினாா்.

பிரதமா் மோடி, ராகுல் வாழ்த்து:

பிரதமா் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், 'கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருது வென்ற வரலாற்றுச் சாதனைக்காக பாயல் கபாடியாவை எண்ணி இந்தியா பெருமிதம் கொள்கிறது. . இந்திய திரைப்பட கல்லூரியின் முன்னாள் மாணவரான அவரது திறமை உலக அரங்கில் தொடா்ந்து பிரகாசிக்கிறது. இது இந்தியாவின் செழுமையான படைப்பாற்றல் குறித்த பாா்வையை எடுத்துக்காட்டுகிறது.. இந்த மதிப்புமிக்க பாராட்டு அவரது திறமைகளை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், புதிய தலைமுறை இந்திய திரைப்பட இயக்குநா்களுக்கு ஊக்கமளிக்கிறது' எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கேன்ஸ் விழாவில் இந்திய நட்சத்திரங்கள் பிரகாசமாக மிளிா்வதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்தாா்.

Tags:    

மேலும் செய்திகள்