இந்தியாவுக்கு வாக்களியுங்கள்... பதிவுக்கு நடிகை குஷ்பு விளக்கம்

லோக்சபா தேர்தலில் வாக்களித்த பிறகு ட்வீட் பதிவிட்ட நடிகை குஷ்பு, #voteforINDIA' என்று தனது எக்ஸ் தளத்தில் ஹேஸ்டேக் போட்டிருந்தார். இது சமூக வலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக நடிகை குஷ்பு ஆவேசமாக விளக்கம் அளித்துள்ளார்

Update: 2024-04-19 14:25 GMT

பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்புவும் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அப்போது அவருடன் அவரது கணவர் சுந்தர் சியும் வந்திருந்தார். இருவரும் ஒருவர் பின் ஒருவராக சென்று வாக்களித்தனர். தொடர்ந்து வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்டில் புகைப்படம் எடுத்தனர். இதன் பின்னர் நடிகை குஷ்பு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில், தான் வாக்களித்த புகைப்படத்தை பதிவிட்டார். கணவர் சுந்தர் சியின் புகைப்படத்தையும் அதில் போட்டிருந்தார். அப்போது அந்த பதிவில், நடிகை குஷ்பு #Vote4INDIA மற்றும் #VoteFor400Paar என்ற ஹேஷ்டேக்குகளை போட்டிருந்தார். இதில், #Vote4INDIA என்ற ஹேஸ்டேக்கை போட்டது நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் மட்டுமின்றி காங்கிரஸ், பாஜகவினர் குஷ்புவின் இந்த ஹேஸ்டேக்கை வைத்து விமர்சிக்க தொடங்கினர்.

குஷ்பு காங்கிரசுக்கு ஓட்டு போட சொல்கிறார். இதற்காக தான் அவர் இந்த ஹேஸ்டேக்கை போட்டுள்ளார் என்றும் விமர்சிக்க தொடங்கினர். காங்கிரசினர் பயன்படுத்தி வரும் இந்த ஹேஸ்டேக்கை குஷ்பு ஏன் போட வேண்டும் என்று பாஜகவினர் குஷ்புவை விமர்சிக்க தொடங்கினர். ஏற்கனவே பிரசாரத்தின் போது உடல்நிலையை காரணம் காட்டி தமிழ்நாடு முழுக்க அவர் பிரசாரம் செய்யவில்லை. 

இந்த நிலையில் இவர் போட்ட ஹேஸ்டேக் மேலும் விவாதப்பொருளாகியது. இந்த நிலையில் அதற்கு நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது ட்வீட் பதிவில் இந்தியாவுக்கு வாக்களியுங்கள் என்பதை படித்தவர்களால், எனது பயோவில் மோடி குறித்தும் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாக்களியுங்கள் என்பது குறித்தும் வாசிக்க முடியாமல் எப்படி போனது. இந்தியா எனது தாய்நாடு. தோல்வி அடைய போகிறவர்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளார்கள் என்றுதான் என்னால் சொல்ல முடியும். களத்தில் தோல்வி அடைய போவதையும் உங்களின் பயத்தையும் இது தெளிவாக காட்டுகிறது. பொறுத்து இருந்து பாருங்கள்.. இந்த முறை மோடிதான் வருவார். பாஜகவிற்காக இந்தியா வாக்களிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்