டிராபிக் ராமசாமி

சமூக போராளி, ‘டிராபிக் ராமசாமி’யின் வாழ்க்கை சம்பவங்கள், அவருடைய பெயரிலேயே படமாகி இருக்கிறது.

Update: 2018-06-23 19:35 GMT
60 வயதை தாண்டிய டிராபிக் ராமசாமிக்கு மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன், பேத்தி என்று நடுத்தர குடும்பம் இருக்கிறது. அவர் சமூக பிரச்சினைகளை தன் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அவற்றுக்கு எதிராக போராடுகிறார். இதனால் அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், தொழில் அதிபர்களின் பகையை சம்பாதிக்கிறார். அவர்களின் அடியாட்கள் கொடுக்கும் அடி-உதையை வாங்குகிறார். என்றாலும் பயப்படாமல், அநீதியை எதிர்த்து தொடர்ந்து போராடுகிறார்.

‘பான்பராக்’ போட்டு ரோட்டில் எச்சில் துப்புபவரை அடித்த குற்றத்துக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்படும் ராமசாமி மீது பெண் இன்ஸ்பெக்டர் எச்சிலை துப்பி விட்டு, “இப்ப என்ன செய்வே?” என்று கேட்கிறார். அவரையும் ஓங்கி அறைகிறார், ராமசாமி. அவரை கோர்ட்டில் நிறுத்துகிறார்கள். “நானும் எச்சில் துப்பினால் என்ன செய்வீர்கள்?” என்று நீதிபதி கேட்கிறார். ராமசாமி தனது செருப்பை கழற்றி தன்னைத்தானே அடித்துக் கொள்கிறார்.

இப்படி சிரிப்பும், ‘சீரியஸ்’சுமாக தொடங்கும் படம், அநேக பிரச்சினைகளை தொட்டு விட்டு, தடை செய்யப்பட்ட மீன் பாடி வண்டி மீது வந்து நிற்கிறது. மீன் பாடி வண்டிகளால் இதுவரை 28 பேர்கள் இறந்திருக்கிறார்கள் என்றும், அந்த வண்டிகளை உடனே தடை செய்ய வேண்டும் என்றும் ராமசாமி போராடுகிறார். இதனால், மீன்பாடி வண்டிகளை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் தொழில் அதிபரின் விரோதத்தை சம்பாதிக்கிறார், ராமசாமி. தொழில் அதிபரும், அவருடைய கோடீஸ்வர நண்பர்களும் சேர்ந்து ராமசாமியை தீர்த்துக் கட்ட முயற்சிக்கிறார்கள்.

“உங்களால் எங்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று குடும்பத்தினர் ராமசாமியை திட்டுகிறார்கள். உடனே அவர் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். கொலை வெறியுடன் துரத்தும் கும்பலிடம் இருந்து அவர் தப்பினாரா, இல்லையா? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

‘டிராபிக் ராமசாமி’ வேடத்தில், ஒரு சமூக போராளியாகவே வாழ்ந்திருக்கிறார், எஸ்.ஏ.சந்திரசேகரன். அவர் ஒவ்வொரு பிரச்சினைகளையும் எதிர்த்து போராடும் காட்சிகளும், அதன் பின் விளைவுகளும் உயிரோட்டமாக இருப்பதால், படம் பார்ப்பவர்களை கதையுடன் ஒன்ற வைக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகரனின் மனைவியாக ரோகிணி, கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்து இருக்கிறார்.

மருமகனாக சேத்தன், மருமகளாக அகிலா, மகனாக ரவிசங்கர், மகளாக அம்மு, பேத்தியாக சரின் ஐஸ்வர்யா ஆகியோர் வருகிறார்கள். நகைச்சுவை நடிகரான இமான் அண்ணாச்சி வில்லனாக வருகிறார். துணை வில்லன்களாக மோகன்ராம், தரணி கந்தசாமி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். நித்யஸ்ரீ பைரவி, வில்லியாக வருகிறார். எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு உதவும் கூலிப்படை தலைவனாக ஆர்.கே.சுரேஷ், கடைசி காட்சியில் கலங்க வைத்து விடுகிறார். பிரகாஷ்ராஜ் நேர்மையான போலீஸ் அதிகாரியாக காவல் துறைக்கு கவுரவம் சேர்க்கிறார்.

விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பு, அம்பிகா, கஸ்தூரி, லிவிங்ஸ்டன், எஸ்.வி.சேகர், மதன்பாப், மனோபாலா ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் தலை காட்டுகிறார்கள்.

பாலமுரளி பானுவின் பின்னணி இசை, காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்து இருக்கிறது. விக்கி டைரக்டு செய்திருக்கிறார். ‘டிராபிக் ராமசாமி’யின் ஓவ்வொரு போராட்டத்தின்போதும் அவரை சமூக விரோதிகள் அடித்து நொறுக்குவதும், போலீஸ் நிலையத்தையே ஒரு பெண் போலீஸ் அதிகாரி காமக்கூடமாக மாற்றுவதும், நம்பும்படி இல்லை. ஆரம்பம் முதல் இறுதி வரை வேகமும், விறுவிறுப்புமாக அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது, திரைக்கதை.

மேலும் செய்திகள்