கதாநாயகனுக்கு கோபம், சந்தோஷம், பயம் வந்தால் அவரது குரல் பெண் குரலாக மாறிவிடும் பிரச்சினைகள் - டாணா

ஆங்கிலேயர் காலத்தில் கிராமத்தில் கொள்ளையடித்த திருடர்கள் அட்டகாசத்தை ஒடுக்கியவரை வெள்ளையர் அரசாங்கம் போலீஸ் வேலை கொடுத்து கவுரவிக்கிறது. டாணா படத்தின் விமர்சனம்.

Update: 2020-01-29 00:13 GMT
அவர் மறைவுக்கு பிறகு ஊரை காத்த சாமி என்று சிலை வைத்து கும்பிடுகிறார்கள். அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு தலைமுறையாக போலீசாகி வருகிறார்கள்.

அவர்கள் வழியில் வரும் பாண்டியராஜனுக்கு உயரம் குறைவாக இருப்பதால் போலீஸ் வேலை மறுக்கப்படுகிறது. தனது மகன் வைபவை போலீசாக்க சபதம் எடுத்து பயிற்சி அளிக்கிறார். ஆனால் வைபவுக்கு கோபம், சந்தோஷம், பயம் ஏற்பட்டால் அவரது குரல் பெண் குரலாக மாறிவிடும் பிரச்சினை இருக்கிறது. இதனால் போலீஸ் வேலைக்கு போக மறுக்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த கோவிலை அகற்றி விட்டு நிலத்தை எடுக்க அரசு முயற்சிக்கிறது. கோவிலை காக்க வைபவ் போலீஸ் வேலைக்கு செல்ல முடிவு செய்கிறார். அதற்கு உயர் அதிகாரியால் தடங்கல்கள் வருகிறது. அதை எதிர்கொண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தாரா? என்பது கிளைமாக்ஸ்.

வைபவ் நகைச்சுவை நாயகனாக வருகிறார். பெண்குரலை மறைக்க படும் அவஸ்தைகள் சுவாரஸ்யம். துப்பு துலக்கும் காட்சியிலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அதிரடி சண்டையிலும் வேகம். வைபவை வசப்படுத்த நந்திதா ஸ்வேதா செய்யும் சில்மிஷங்கள் ரசிக்க வைக்கின்றன. யோகிபாபு சிரிக்க வைக்கிறார். பாண்டியராஜன் அனுபவ நடிப்பால் மனதில் நிற்கிறார்.

ஹரிஷ் பெராடி வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். உமா பத்மநாபன், பசங்க சிவகுமார், ஆகியோரும் உள்ளனர். ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. கொலைகள், வில்லன்கள் என்று பிற்பகுதியில் வேகம், கிராமத்து பாரம்பரியம், காதல், நகைச்சுவை கலவையாக காட்சிகளை ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குனர் யுவராஜ் சுப்பிரமணி. விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் கேட்கலாம். சிவாவின் ஒளிப்பதிவும் அம்சம்.

மேலும் செய்திகள்