மகன் சாதிமாறி திருமணம்: தந்தை சாதிவெறி கொலைகாரர்களை திருத்தும் சமூக அக்கறை கொண்ட படம் - குட்டி தேவதை

மகன் சோழவேந்தன் வேறு சாதியை சேர்ந்த தேஜாவை காதலித்து தந்தைக்கு தெரியாமல் திருமணம் செய்து குடித்தனம் நடத்துகிறார். "குட்டி தேவதை" படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.

Update: 2020-02-24 16:59 GMT
ஊர் தலைவர் வேலராமமூர்த்தி சாதி வெறி பிடித்தவர். சாதிமாறி திருமணம் செய்பவர்களை தாக்குகிறார். கொலையும் செய்கிறார். அவரது மகன் சோழவேந்தன் வேறு சாதியை சேர்ந்த தேஜாவை காதலித்து தந்தைக்கு தெரியாமல் திருமணம் செய்து குடித்தனம் நடத்துகிறார். இந்த விஷயம் தெரிந்து வேலராமமுர்த்தி கொதிக்கிறார்.

இருவரையும் கொலை செய்ய அடியாட்களுடன் துரத்துகிறார். இதில் தேஜா பிடிபட வெட்டி சாய்க்கிறார். சோழவேந்தன் தனது பெண்குழந்தையுடன் நகரத்துக்கு தப்பி செல்கிறார். அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளியான எம்.எஸ்.பாஸ்கரின் மகள் சோழவேந்தனை விரும்புகிறார்.

இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கும்போது மனைவி தேஜா உயிரோடு வந்து நிற்கிறார். இன்னொரு புறம் சோழவேந்தனை கொலை செய்ய வேல ராமமூர்த்தி ஆட்கள் தேடி அலைகிறார்கள். வேல ராமமூர்த்தியின் சாதிவெறி நீங்கியதா? மகன், மருமகளை ஏற்றுக்கொண்டாரா? என்பது மீதி கதை.

சாதிவெறியராக வரும் வேல ராமமுர்த்தி அனுபவ நடிப்பால் உக்கிரம் காட்டுகிறார். பேத்தியை கொஞ்சும்போது பாசமான தாத்தாவாக இன்னொரு முகத்தையும் வெளிப்படுத்துகிறார். சோழவேந்தன், காதலனாகவும் மனைவியை இழந்து தவிக்கும் கணவனாகவும் மகள் மீது பாசம் காட்டும் தந்தையாகவும் யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார்.

தேஜா, காயத்ரி இருவருக்கும் அழுத்தமான கதாபாத்திரங்கள். அதை நிறைவாக செய்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர் நகைச்சுவை ஏரியாவை கலகலப்பாக வைத்துள்ளார். சிறுமியாக வரும் பேபி சவி நிறைவு. ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் பிற்பகுதியில் வேகம். ஆணவக் கொலைகாரர்களை திருத்தும் சமூக அக்கறையோடு படத்தை கொடுத்து கவனம் பெற்றுள்ளார் இயக்குனர் அலெக்சாண்டர். அமுதபாரதியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். சூரியன், நவுசத்தின் ஒளிப்பதிவு பலம்.

மேலும் செய்திகள்