கவித்துவமான டைட்டிலில், ஒரு குற்ற பின்னணி கதை, சம்பவங்கள் முழுவதும் ஊட்டியில் நடக்கின்றன - படம் பொன்மகள் வந்தாள்

தியேட்டர்களில் வெளியாகாமல் இணையதளத்தில் வெளியான முதல் தமிழ் படம் பொன்மகள் வந்தாள் - விமர்சனம் பார்க்கலாம்.

Update: 2020-05-29 21:30 GMT
ஐந்து சிறுமிகள் வரிசையாக கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குப்பின் கொலை செய்யப்படுகிறார்கள். சிறுமிகளை கடத்துவது ஒரு வடமாநில பெண் என்றும், அவள் ஒரு ‘சைக்கோ’ என்றும் ஊர் முழுவதும் பேசப்படுகிறது. ஜனங்கள் பீதி அடைகிறார்கள்.

அந்த ‘சைக்கோ’ பெண் இன்னொரு சிறுமியை கடத்த முயன்றபோது, அவளை 2 இளைஞர்கள் தடுக்கிறார்கள். அந்த இரண்டு பேரையும் ‘சைக்கோ’ பெண் சுட்டு கொல்கிறாள். அவளை போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொல்கிறது. இப்படியாக அந்த சிறுமிகள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கை முடித்து வைக்கிறது, போலீஸ். 15 வருடங்களுக்குப்பின், அந்த வழக்கை ‘பெட்டிசன்’ பெத்துராஜும், அவருடைய மகள் என்று சொல்லப்படும் வக்கீல் வெண்பாவும் தூசு தட்டி, மறுவிசாரணை கோருகிறார்கள். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நகரின் மிகப்பெரிய பணக்காரரும், பெரும்புள்ளியுமான வரதராஜன், இந்த வழக்குக்குள் கொண்டுவரப்படுகிறார்.

அவருக்கும், சிறுமிகள் கடத்தல் மற்றும் கொலைகளுக்கும் என்ன தொடர்பு? சுட்டுக்கொல்லப்பட்ட 2 இளைஞர்கள் யார், ‘சைக்கோ’ பெண், உண்மையான குற்றவாளிதானா? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடைகள், வெண்திரையில்...

போலீஸ் என்கவுண்டர் செய்த சைக்கோ கொலைகாரியாகவும், வக்கீல் வெண்பாவாகவும் இரண்டு கதாபாத்திரங்களில், ஜோதிகா. ஒன்றில் அவரும் உருகி, படம் பார்ப்பவர்களையும் உருக வைக்கிறார். இன்னொன்றில் புத்திசாலித்தனமான வக்கீலாக நீளம் நீளமாக வசனம் பேசி, ஆச்சரியப்பட வைக்கிறார். கதாபாத்திரமாகவே மாறிய அவருடைய திறமைக்கும், முகபாவனைகளுக்கும், படம் பார்ப்பவர்களை வசப்படுத்தும் நடிப்புக்கும் விருது கொடுத்து பாராட்ட வேண்டும். இன்னொரு ‘நடிகையர் திலகம்!’

படத்தில் ஜோதிகாவை அடுத்து கவனம் ஈர்ப்பவர்கள் குரு பாக்யராஜும், அவருடைய சிஷ்யர் பார்த்திபனும். சில காட்சிகளில் பார்த்திபன், குருவை மிஞ்சும் சிஷ்யனாகி விடுகிறார். கோர்ட்டு சீன்களில் இவர், ஜோதிகாவை மடக்கும்போது, நிமிர்ந்து உட்கார வைக்கிறார். பெரும் பணக்காரர் வரதராஜனாக தியாகராஜன். இவர் வருகிற காட்சிகள் எல்லாமே மிரட்டலானவை. பாண்டியராஜனுக்கு அவ்வளவாக வேலை இல்லை. நீதிபதி கதாபாத்திரத்துக்கு பிரதாப்போத்தன், சரியான தேர்வு.

காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் ராம்ஜி. இசை: கோவிந்த் வசந்தா. பாடல்களில் மென்மையான ராகங்கள். பின்னணி இசை மனதை ஈர்க்கிறது. திகிலும், திருப்பங்களுமாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் ஜே.ஜே.பிரடரிக். படத்தின் முதல் பாதி, சூப்பர் வேகம். இரண்டாம் பாதியில், சில காட்சிகள் கவனம் பெறாமல் மெதுவாக கடந்து போகின்றன.

படத்தின் டைட்டிலுக்கு பெருமை சேர்க்கிறது, ஜோதிகாவின் நடிப்பு.

மேலும் செய்திகள்