சண்முகபாண்டியனின் “கொம்பு சீவி” - சினிமா விமர்சனம்

பொன்ராம் இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளியான ‘கொம்பு சீவி’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;

Update:2025-12-20 14:42 IST

மதுரையில் வைகை அணை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் அந்த கிராமத்துக்கே முக்கிய நபராக திகழ்கிறார். மக்களின் பிரச்சினைகளையும் கட்டப்பஞ்சாயத்து மூலம் சரி செய்கிறார். இதற்கிடையில் ஆதரவின்றி இருக்கும் சண்முக பாண்டியனுக்கு, சரத்குமார் ஆதரவு கரம் நீட்ட, இருவரும் ஒன்றாகவே பயணிக்கிறார்கள். சட்டவிரோதமாக கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள். பணத்துடன், போலீசாரின் பகையையும் சம்பாதிக்கிறார்கள். இந்த சூழலில் ஆந்திராவுக்கு கஞ்சாவை விற்பனை செய்வதற்காக சரத்குமாரும், சண்முக பாண்டியனும் பயணம் மேற்கொள்கிறார்கள். இவர்களை மடக்கிப் பிடிக்க போலீசாரும் வலை விரிக்கிறார்கள். இறுதியில் என்ன ஆனது? இருவரும் போலீசில் சிக்கினார்களா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. 

ஆறடி உயரத்துடன் ஆஜானுபாகுவாய் கலக்கியுள்ளார், சண்முகபாண்டியன். அதிரடியில் அசத்தியுள்ள அவர், நடிப்பிலும் முன்னேற்றம் கண்டுள்ளார். 'சென்டிமெண்ட்' காட்சிகளில் இன்னும் பயிற்சி தேவை. 'ரொக்கப் புலி'யாக வரும் சரத்குமார் ஆக்சன் - நகைச்சுவையில் அமர்க்களம் செய்கிறார். வெள்ளை தாடி - மீசை மட்டும் 'செட்' ஆகவில்லை அந்த 20 வயது இளைஞருக்கு... 'அய்யாத்துரை...' பாடல் அலங்காரம்.

காக்கி சட்டையிலும் 'கவனம்' ஈர்க்கும் தார்ணிகா, நடிப்பில் சற்று தடுமாறி இருக்கிறார். முனிஷ்காந்த், கல்கி ராஜா ஆகியோர் சிரிக்க வைக்க முயற்சித்து இருக்கிறார்கள். காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் ஆகியோரும் கொடுக்கப்பட்ட வேலையை குறைவின்றி செய்திருக்கிறார்கள்.

பீரியட் கால படத்தில் முடிந்ததை முயற்சித்துள்ளார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் எதிர்பார்த்த 'மேஜிக்' மிஸ்ஸிங். கலகலப்பான காட்சிகள் படத்துக்கு பலம். திரைக்கதையில் பல இடங்களில் தடுமாற்றம் தெரிகிறது. இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு போதாது.

ஒரு பக்கம் ஆக்சன், இன்னொரு பக்கம் நகைச்சுவை என அடிக்கடி பயணிக்கும் இரட்டை மாட்டு வண்டியை இந்த முறையும் ஓட்டியுள்ள இயக்குனர் பொன்ராம், 'லாஜிக்' பார்க்காமல் அடித்து விரட்டியுள்ளார். குற்ற சம்பவங்களுக்கு போலீசாரே துணை போவது போல காட்சிகள் தேவையா இயக்குனரே...

கொம்பு சீவி - இன்னும் சீவி இருக்கலாமே...

Tags:    

மேலும் செய்திகள்