கோடையில் பறவைகளை பாதுகாக்கலாம்

வீட்டில் இருக்கும் உபயோகமற்ற பொருட்களைக்கொண்டு எளிமையான முறையில் பறவைகளுக்கு உணவும், தண்ணீரும் அளிக்கும் ‘பீடர்’ செய்வதற்கான குறிப்புகள் இதோ

Update: 2022-03-21 05:30 GMT
ள்ளி விடுமுறை, சுற்றுலா, உறவினர் வருகை, குழந்தைகளின் உற்சாக விளையாட்டுகள் என்று கோடைகாலம் ஆனந்தமாக இருக்கும். அதேசமயம் வெயிலின் தாக்கத்தால் விலங்குகள், பறவைகள் போன்றவை சிரமப்படும். அவற்றுக்கு உதவும் விதமாக நமது வீட்டு வாசல், பால்கனி, மேல்தளம் போன்றவற்றில் தண்ணீர், தானியங்கள் வைக்கலாம். குழந்தைகள் விடுமுறையில் வீட்டில் இருப்பதால், அவர்களை இவ்வாறு செய்வதற்கு பழக்கலாம். இதன் மூலம் பிற உயிர்கள் மீது அன்பு செலுத்தும் குணம் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் உபயோகமற்ற பொருட்களைக்கொண்டு எளிமையான முறையில் பறவைகளுக்கு உணவும், தண்ணீரும் அளிக்கும் ‘பீடர்’ செய்வதற்கான குறிப்புகள் இதோ…

தண்ணீர் வழங்கும் அமைப்பு:

தேவையான பொருட்கள்
பழைய பிளாஸ்டிக் தட்டு - 1
குளிர்பான பாட்டில் - 1
சணல் கயிறு - 1
சிறிய திருகு - 1
மரப்பலகை (சிறிய துண்டு) - 1



செய்முறை:
முதலில் பிளாஸ்டிக் பாட்டிலின் கழுத்துப் பகுதியை சுற்றிலும் மூன்று ஓட்டைகள் போட்டுக்கொள்ளவும்.

பின்பு படத்தில் காட்டியபடி பாட்டிலின் மூடியை, பிளாஸ்டிக் தட்டுடன் இணைத்து வைத்து நடுப்பகுதியில் சிறிய ஓட்டைப் போடவும்.

பின்னர் மரப்பலகை, பிளாஸ்டிக் தட்டு, பாட்டில் மூடி இவை மூன்றையும் திருகு மூலம் இணைக்கவும்.

பாட்டிலின் அடிப்பகுதியில், தொங்கவிடுவதற்கு ஏற்றதுபோல சணல் கயிறால் கட்டவும்.

இப்போது பாட்டிலில் தண்ணீர் நிரப்பி மூடியோடு இணைக்கவும்.

இந்த அமைப்பை கயிற்றின் மூலம் தலைகீழாக தொங்கவிடும்போது, தண்ணீர் சிறிது சிறிதாக கீழிறங்கி பிளாஸ்டிக் தட்டில் நிரம்பும். கீழே சிதறி வீணாகாது. இதை பால்கனிப் பகுதியில் மாட்டி வைக்கலாம்.


உணவு வழங்கும் அமைப்பு:

தேவையான பொருட்கள்
குளிர்பான பாட்டில் - 1
உபயோகமற்ற நீண்ட ஸ்பூன்கள் - 2
சணல் கயிறு - 1



செய்முறை:
பிளாஸ்டிக் பாட்டிலில் படத்தில் காட்டியபடி ஸ்பூன்கள் நுழைப்பதற்கு ஏற்ப இடைவெளி விட்டு ஓட்டைகள் போடவும்.

பின்பு அந்த ஓட்டைகளில் ஸ்பூன்களை எதிர் எதிர் திசையில் நுழைத்து வைக்கவும்.

பாட்டிலின் கழுத்துப் பகுதியில், தொங்கவிடுவதற்கு ஏற்றதுபோல சணல் கயிறால் கட்டவும்.

பாட்டிலில் தானியங்களை நிரப்பவும்.

பின்பு பால்கனிப் பகுதியில் பாட்டிலை தொங்க விடவும்.
சிறு பறவைகள் ஸ்பூன்களின் மேல் உட்காரும்போது பாட்டில் அசையும். அந்த அசைவின் மூலம் ஸ்பூன்கள் நுழைத்துள்ள ஓட்டைகள் வழியே தானியங்கள் ஸ்பூன்களில் வந்து விழும். இவற்றை பறவைகள் சாப்பிடும். 

மேலும் செய்திகள்