இப்படிக்கு தேவதை

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காணும் பகுதி இது.

Update: 2022-02-07 05:30 GMT
நான் இல்லத்தரசி. எனது கணவர் விற்பனை துறையில் பணியாற்றுகிறார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் கணவர் எப்போதும் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும்போது, மோசமான மனநிலையிலேயே இருக்கிறார். அலுவலகத்தில் ஏதாவது நடந் ததா? என்று நான் கேட்பது கூட அவருக்குப் பிடிக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?

அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வரும் உங்கள் கணவர் அலுவலக பணிச்சுமை, சக ஊழியர்களுடன் நடந்த விவாதம், போக்குவரத்து நெரிசல் போன்ற பல காரணங்களால் அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கலாம். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் மனநிலைக்கு அவர் வரும் முன்பு, முதலில் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு அவருக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். அதற்குள் நீங்கள் கேட்கும் கேள்விகள் நல்ல நோக்கத்துக்காகவே இருந்தாலும், அது அவருக்கு எரிச்சலை உண்டாக்கும். 

எனவே சிறிது நேரம் அமைதியாக இருங்கள். அவர் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது அமைதியாகக் கேளுங்கள். அதற்கு முன்பு நீங்களாக எதையும் தீர்மானித்து விடாதீர்கள். அவர் உங்களிடம் பகிரும்போது குறுக்கே கேள்விகளைக் கேட்காதீர்கள். எந்த பிரச்சினையையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்துங்கள். ஆறுதலாக இருங்கள். இவ்வாறு செய்தால் அவரது மனநிலை மாறும். மகிழ்ச்சி உண்டாகும்.

னக்கு அடிக்கடி கோபமும், அழுகையும் வருகிறது. எதன் மீதும் ஆர்வம் இல்லாத மனநிலையில் இருக்கிறேன். எனது குடும்பத்தினர் என்னை சார்ந்து இருப்பதால், அவர்களிடம் என்னால் இதை தெரிவிக்க முடியவில்லை. நான் இதில் இருந்து மீள்வதற்கு வழி கூறுங்கள்?

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினையைத்தான் நீங்களும் சந்தித்து இருக்கிறீர்கள். தொடர்ந்து குடும்பத்தினரை கவனிப்பதிலேயே ஈடுபட்டு இருப்பதால், உங்களை கவனிக்க மறந்ததன் விளைவே இது. இதை உங்களுக்குள்ளேயே வைத்து இருந்தால் தீவிரமான பாதிப்புகள் ஏற்படலாம். எனவே உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் உட்கார வைத்து, உங்கள் நிலையைப் பற்றி பொறுமையாகக் கூறுங்கள். அவர்களுக்குப் புரிய வையுங்கள். 

வீட்டு வேலைகள் மற்றும் இதர வேலைகளை அவர்களுக்கும் பிரித்து கொடுங்கள். இதன் மூலம் உங்களுக்கான நேரம் கிடைக்கும். அந்த நேரத்தில் உங்கள் மனதுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபடுங்கள். வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்காமல், மொட்டை மாடியில் சிறிது நேரம் நடக்கலாம். பரந்து விரிந்த வானத்தை ரசிக்கலாம். பிடித்த பாடல்கள் கேட்கலாம். இதன் மூலம் மனம் அமைதியாகும். நீங்கள் ஆரோக்கியமான மனநிலையில் இருந்தால், குடும்பத்தின் மகிழ்ச்சி மேலும் அதிகரிக்கும். வாழ்த்துக்கள்.



டாக்டர் சங்கீதா மகேஷ், உளவியல் நிபுணர். உளவியல் தொடர்பான முதுகலை படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர். பல மாநாடுகளில் கலந்துகொண்டு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். அனைத்து தரப்பினருக்கும் மனநலம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கி வருகிறார். 

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். தங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி: 
‘தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி’, 
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007. 
மின்னஞ்சல்: devathai@dt.co.in

மேலும் செய்திகள்