கிராம மக்களை மகிழ்ச்சிப்படுத்திய மாணவி ஜெயலட்சுமி

கழிப்பறைகள் கட்டப்படுவதற்கு முன்பு, இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றோம். போகும் வழியில் மதுக்கடைகள், மெயின் ரோடு எல்லாவற்றையும் கடந்து தான் செல்ல வேண்டும். இதன் மூலம் நிறைய சிரமப்பட்டிருக்கிறோம்.

Update: 2021-11-29 05:30 GMT
“இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக தினமும் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தது, எனக்கு மட்டுமில்லாமல், எல்லாப் பெண்களுக்கும் சிரமமாக இருந்தது. இப்போது எனது கிராமத்துப் பெண்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்காங்க” என்கிறார் ஜெயலட்சுமி. கல்லூரி மாணவியான இவர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை, ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் மாற்றியிருக்கிறார்.

புதுக்கோட்டை அருகே ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜெயலட்சுமி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். மிகவும் பின்தங்கிய ஏழை மக்கள் வாழும் இவரது பகுதியில், யார் வீட்டிலும் கழிப்பறை வசதி இல்லை. தினமும் இதற்காக ஊர் எல்லைப் பகுதிக்கு நடந்து செல்ல வேண்டியது இருந்தது. இந்த நிலையில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து வந்த ஜெயலட்சுமி, சர்வதேசத் தேர்வில் கலந்துகொண்டு, அமெரிக்க விண்வெளி மையமான ‘நாசா’வுக்கு செல்வதற்கான பயிற்சிகள் பெறுவதற்கு தகுதி பெற்றார். 

இதற்காக அவருக்கு நிதி உதவி செய்வதற்கு ஒரு தொண்டு நிறுவனம் முன்வந்தபோது, அவர்களிடம் தனது கிராமம் முழுவதும் உள்ள வீடுகளுக்குக் கழிப்பறை கட்டித்தருமாறு கோரிக்கை வைத்தார் ஜெயலட்சுமி. அவரது கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு முதல் 126 கழிப்பறைகள் கட்டப்பட்டு, தற்போது முழுமையான பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. 

இதுகுறித்து அவரிடம் பேசினோம். 

“எனது அம்மா மனநிலை பாதிக்கப்பட்டவர். நான் சிறுபிள்ளையாக இருக்கும்போதே அப்பா வேறு திருமணம் செய்துகொண்டு போய்
விட்டார். எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். வீட்டுச் சூழ்நிலையை சமாளிப்பதற்காக, தினமும் பள்ளிக்கூடம் முடிந்ததும் முந்திரிப் பருப்பு உரிக்கும் வேலைக்குச் செல்வேன். செய்யும் வேலையைப் பொறுத்து சம்பளம் கிடைக்கும். அதை வைத்து செலவுகளைச் சமாளிப்போம்.

ஊரடங்கு காலத்திலும் வேலைக்குப் போனேன். நான் நன்றாகப் படிப்பேன். ஒரு நாள் விளையாடிக்கொண்டு இருந்தபோது மழைத் தண்ணீரில் கிடந்த செய்தித்தாள் துண்டில் ராக்கெட் படம் போட்டிருந்தது. என்னை மாதிரி ஒரு பொண்ணு ‘நாசா’ செல்வதற்குத் தேர்வு எழுதி தகுதி பெற்றதாக அதில் செய்தி வெளியாகி இருந்தது. ‘நானும் அதுமாதிரி எழுத முடியுமான்னு’ எங்கள் ஆசிரியையிடம் கேட்டேன்.

அவர் வழிகாட்டுதல்படி ‘வான் அறிவியல்’ பற்றி நிறைய படித்து தேர்வு எழுதினேன். கம்ப்யூட்டர் சென்டர் போய் பணம் கட்டித் தேர்வு எழுதுவதற்கு வசதி இல்லை. எனது சித்தப்பாவின் செல்போனை வாங்கி, அதன் மூலம் அந்தத் தேர்வை எழுதினேன். அதில் 4 ஆயிரம் பேரில் ஒருத்தியாகத் தேர்வானேன். இது, போன வருடம் நடந்தது.



என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு நிறைய பேர் உதவி செய்தார்கள். அப்போதுதான் கிராமாலயா தொண்டு நிறுவனத்தில் இருந்து என்னைக் கூப்பிட்டுப் பேசினாங்க. ‘உனக்கு என்ன உதவி வேண்டும்? வேற ஏதாவது செய்ய விரும்புறோம்’ என்று சொன்னாங்க. அப்போதான் எனக்கும், எங்க கிராமத்துப் பெண்களுக்கும் கழிப்பறை கட்டித் தர முடியுமான்னு கேட்டேன்” என இயல்பாகச் சொல்கிறார் ஜெயலட்சுமி.

அதைத் தொடர்ந்து தொண்டு நிறுவனர் தாமோதரன் மேற்பார்வையில், ஆதனங்கோட்டையில் ஜெயலட்சுமி குடியிருக்கும் திருவள்ளுவர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 126 வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. உறிஞ்சு குழாய் கழிப்பறை மற்றும் குளியலறையுடன் கூடிய வகையில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

“கழிப்பறைகள் கட்டப்படுவதற்கு முன்பு, இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றோம். போகும் வழியில் மதுக்கடைகள், மெயின் ரோடு எல்லாவற்றையும் கடந்து தான் செல்ல வேண்டும். இதன் மூலம் நிறைய சிரமப்பட்டிருக்கிறோம். 

இப்போது என் கிராமப் பெண்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்காங்க. கொரோனா பரவல் காரணமாக ‘நாசா’ போறது தள்ளிப் போயிருக்கு. அம்மாவுக்கு இப்போ சிகிச்சை கொடுத்துட்டு இருக்கோம். அவர் சீக்கிரம் சரியாக வேண்டும்” என்றவர், தற்போது பட்டப்படிப்பில் வரலாறு படித்து வருகிறார். வீட்டில் சமையல் உட்பட அனைத்து வேலைகளையும் செய்து விட்டு, மாலை நேரத்தில் கூலி வேலைக்குச் சென்று ஒற்றை ஆளாய் தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ஜெயலட்சுமிக்கு, மாவட்ட ஆட்சியாளர் ஆக வேண்டும் என்பது விருப்பமாம்.

மேலும் செய்திகள்