தீபிகா படுகோனே நடித்த படப்பிடிப்பில் ரகளை டைரக்டர் தாக்கப்பட்டார்

தீபிகா படுகோனே நடித்த இந்தி படப்பிடிப்பில் சிலர் புகுந்து ரகளை செய்தார்கள். டைரக்டர் தாக்கப்பட்டார். படப்பிடிப்பு அரங்குகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

Update: 2017-01-28 11:01 GMT
இந்தி பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி தற்போது, 'பத்மாவதி' என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்தது.

அப்போது ஜெய்ப்பூரில் உள்ள கார்னி சேனா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கும்பலாக வந்து சஞ்சய் லீலா பன்சாலி உள்பட படப்பிடிப்பு குழுவினர் சிலரை அடித்து உதைத்ததாகவும், படப்பிடிப்பு அரங்குகளையும் அவர்கள் அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது.

ஜெய்ப்பூரில், 1300-ம் ஆண்டுகளில் வாழ்ந்த வீரப்பெண்மணி, பத்மாவதி. இந்து மதத்தை சேர்ந்த இவர் முஸ்லிம் மன்னர் ஒருவரை மணந்து கொண்டதாகவும், அவருடைய வாழ்க்கை வரலாறைத்தான் 'பத்மாவதி' என்ற பெயரில் சஞ்சய் லீலா பன்சாலி படமாக்கி வருவதாகவும் கருதி, கார்னிசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

''ஜெர்மனிக்கு போய் ஹிட்லரை விமர்சித்து படம் எடுக்க முடியுமா?'' என்று தாக்குதல் நடத்தியவார்கள் ஆவேசமாக கேட்டதாக படக்குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரபல இந்தி டைரக்டர்கள் ராம்கோபால் வர்மா, மகேஷ்பட், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். சம்பவத்தின்போது தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகிய மூன்று பேரும் படப்பிடிப்பு தளத்தில் இல்லை. தாக்குதல் சம்பவம் பற்றி இவர்கள் மூன்று பேரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மூன்று பேரும் மவுனமாக இருப்பது ஏன்? என்று படக்குழுவை சேர்ந்த சிலர் கேள்வி விடுத்து இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்